2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித், எஸ்.எம்.எம்.றம்ஸான்,எஸ்.எம்.அறூஸ்

2016ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்திலுள்ள கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கொண்டு வருகின்றார்.

இதற்கமைய, கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம், நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானம், மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானம், சாய்ந்தமருது விளையாட்டு மைதானம், சம்மாந்துறை விளையாட்டு மைதானம், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொத்துவில் விளையாட்டு மைதானம் ஆகியன சகல வசதிகளுடன் கூடிய மைதானங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதுதொடர்பான கலந்துரையாடல்கள் நேற்று சனிக்கிழமை குறித்த பிரதேச செயலகங்களில் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்றன.

இக்கூட்டங்களில், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், விளையாட்டுத்துறை அமைச்சின் பொறியியலாளர் தம்மிக ரணசிங்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, அபிவிருத்தி செய்யப்படவுள்ள மைதானங்களை பிரதி அமைச்சர் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் இவ்வருடத்துக்குள் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஒரு வாரத்தினுள் மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் பிரதி அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதுடன் சர்வதேச, தேசிய தரத்திலான விளையாட்டு மைதானங்களையும் அமைக்கவுள்ளேன் என்றார்.

இதேவேளை,அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விளையாட்டு மைதானங்கள் இரண்டாம் கட்ட அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X