2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்த ஒரே எதிர்கட்சியே கூட்டமைப்பு’

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் முடிந்த கடந்த 10 வருடங்களில், தமிழரசுக் கட்சியின் தலைமை, தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுத்தந்துள்ளதென, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கூட, இந்த தலைமையால் முடியவில்லை. பிரதான எதிர்க் கட்சியாக அமர்ந்துகொண்டு, அரசாங்கத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததைத் தவிர, வேறேதுவும் செய்யவில்லை. வருடா வருடம், உலகிலேயே வரவு - செலவு திட்டத்துக்கு ஆளும் அரசாங்கத்துக்கும் ஆதரவு கொடுத்த ஒரே எதிர்க்கட்சியாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருந்துள்ளது. இதன் மூலம் பேசப்பட்ட பேரங்கள், தங்கள் சொந்த நலன்களுக்காகவே பயன்படுத்தப்பட்டன.

“விடுதலைப் புலிகளின் நண்பர்களாக நடித்து, விடுதலைப் புலிகள் வீழ்ந்த பின் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்தை அழித்தமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்கள். தொடர்ந்து நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், புலிகளை அழித்தமைக்காக அன்றைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவும் தெரிவித்து, பட்ட நன்றிக்கடனைத் தீர்த்துக்கொண்டார்கள்.

“அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தமிழ் மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் இதுவரையும் தங்கள் விருப்பத்தின் பெயரில் வேட்பாளர்களை நியமனம் செய்தார்கள். ஆனால், கடந்த 10 வருடங்களாக திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்களின் இருப்பு பறிபோவதை வேடிக்கைப் பார்த்ததைத் தவிர, வெறேதுவும் செய்யவில்லை.

“ஆகவே தமிழ் மக்கள் இந்த தேர்தலிலாவது சிந்தித்து, புதிய அரசியல் அணுகுமுறையில் களமிறங்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை, புதிய மாற்றத்துக்கான தெரிவாகத் தேர்ந்தெடுத்து வாக்களிக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்” என, ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .