2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உலகில் ஐந்து கோடிப் பேர் டெங்கினால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி உலகில் ஐந்து கோடிப் பேர் டெங்கினால்; பாதிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

பல்துறை சார்ந்த அரச நிறுவனங்கள், அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கான டெங்கு விழிப்புணர்வும் அது தொடர்பான கடந்தகால மீளாய்வுக் கூட்டமும் நேற்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'டெங்கு வைரஸ் வருமுன்னர் பாதுகாத்துக்கொள்வதே சிறந்த பாதுகாப்பான முறையாக அமையும். கவனயீனமாகவும் டெங்கின் அபாயம் பற்றி அறிந்துகொள்ளாமலும் எம்மில் அதிகமானோர் காணப்படுகின்றனர். அதனாலேயே இன்று டெங்கு ஒரு சவாலாக தோற்றம் பெற்று வருகின்றது.

டெங்கு வைரஸ் இன்று ஆசியா நாடுகளிலேயே அதிகம் காணப்படுகின்றபோதிலும்,  ஐரோப்பிய நாடுகளில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இது இலங்கைக்கு 1960 களில் வந்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. டெங்கினால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். டெங்கின் பாதிப்பினால் 2016ஆம் ஆண்டின் மே மாதம் 20ஆம் திகதி வரையில் 17,195 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற மேல்மாகாணங்களைச் சேர்ந்தவர்களாகும். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 340 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எமது பிரதேசத்தில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் வெற்றி அளித்துள்ளது. மேலும் எமது செயற்பாட்டினை அதிகரித்து டெங்கற்ற ஒரு முன்னுதாரணமான பிரதேசமாக வைத்திருப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .