2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்குத் தயார்’

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி அரசியலுக்கு அஞ்சாத கட்சியென்றால், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் வளர்த்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறெதுவும் இருக்கமுடியாதெனத் தெரிவித்த அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு, தானும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 18ஆவது நினைவேந்தல் நிகழ்வு, சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில், நேற்று மாலை (16) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “உற்சாகமாக அரசியல் செய்வதாக இருந்தால், எதிர்க்கட்சியில் அமரவேண்டும். இதற்குத் தயாராக இருந்தால் நானும் தயார். அமைச்சுப் பதவிகள் இல்லாவிட்டாலும், கட்சி வாழும் என்பதை நிரூபித்த கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் தவிர வேறெதுவும் கிடையாது.

“ஏனைய கட்சிகள் முடிந்தால், அமைச்சுப் பதவிகளை துறந்துவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்து பாருங்கள். அந்தக் கட்சி இடம்தெரியாமல் அழிந்துபோய்விடும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் இருக்கும்போது வளர்ந்தமை போன்று, எப்போதும் வளர்ந்ததில்லை. அதுதான் இந்தக் கட்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை" என்று குறிப்பிட்டார்.

தன்னைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட, நேரில் கண்டால், தன்னை "தலைவர்" என்று அழைக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு இருக்கின்ற அந்தஸ்தே அதுவென்றும், மர்ஹூம் அஷ்ரப்பின் மகுடத்தைச் சூடிக்கொண்டிருப்பதால் தனக்குக் கிடைக்கின்ற மகிமையே அதுவெனவும் குறிப்பிட்டார்.

“இந்த இயக்கத்திலிருந்து அரசியலைக் கற்றுக்கொண்டு, சில்லறைக் கட்சிகளை நடாத்திக்கொண்டிருப்பவர்கள், மறைந்த தலைவர் வளர்த்த கட்சியை எதுவும் செய்துவிட முடியாது. இந்த இயக்கத்தை வாழவைப்பதற்கு, போராளிகளும் இளைஞர்களும் என்றும் தயார்நிலையில் இருக்கின்றனர்.

“முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் விருட்சத்தை வளர்ப்பதற்கு, பலர் பொருளாதார, உடல், உள ரீதியாகப் பங்களிப்புச் செய்துள்ளனர்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, யாருக்கும் கதவுகளை மூடவில்லை எனவும் கட்சியின் கதவு விசாலமாக திறந்து கிடக்கிறது எனவும் தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், பிரிந்துசென்ற பலர் இன்று கதவுகளைத் தட்டுகின்றனர் எனவும் தெரிவித்ததோடு, "தேர்தல் காலங்களில் சிலர் வெளியேறுவதுண்டு, சென்றவர்களும் திரும்பி வருவதுண்டு. வருகின்றவர்களுக்குப் பதவிகளும் தாராளமாகக் காத்திருக்கின்றன” என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X