2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நல்லூர் தாக்குதலுக்கு கிழக்கில் கண்டனம்

Editorial   / 2017 ஜூலை 25 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், தீஷான் அஹமட், அஸ்லம் எஸ்.மௌலானா, ஏ.எல்.எம்.ஷினாஸ், வடமலை ராஜ்குமார், பொன்ஆனந்தம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும், இன்று (25) முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் வடக்கு-  கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில், ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டிப்பதுடன், தாக்குதலை நடத்தியவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது நீதித்துறையைப் பாதுகாக்குமாறு கோரிய மகஜரொன்றை, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக, மட்டக்களப்பு மாவட்ட செயலாளரிடம்  ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

கல்முனையில் பேரணி

வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், கல்முனை நகரிலும் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது.

இப்பேரணியில், இலங்கையின் நீதித்துறையைப் பாதுகாக்குமாறு கோரியும் சம்பவத்தின் சூத்திரதாரிகள் கண்டறியப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திருகோணமலையில் மகஜர் கையளிப்பு

திருகோணமலையில் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டமும்  ஆளுநர் ஊடாக மகஜர் ஒன்று, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதேவேளை, மூதூர் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தினர், மூதூர் நீதிமன்றத்துக்கு முன்னால் கறுப்புத் துணிகளால், தங்களுடைய வாயைக் கட்டிக்கொண்டு, சம்பவத்தைக் கண்டித்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய சுலோகங்களையும் ஏந்தி நின்று, எதிர்ப்பைக் காட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .