2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிஸாம் காரியப்பருக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பருக்கு சுழற்சிமுறையில் தேசியப்பட்டியல் ஆசனம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணி மன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இந்தக் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரியை பெற்றுத்தந்த மு.கா. ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மறைவின்;; பின்னர் நீங்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.

நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின்னர் நல்லாட்சி மலர்ந்துள்ளதுடன், சர்வதிகாரத்துக்கும் இனவாதத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நல்லாட்சி யுகத்தில் சேவைகளைச் செய்து மக்களின் மனங்களைக் கவர்வதுடன், மு.கா போராளிகளிடம் நிலவும் அதிருப்தியையும் போக்குவதற்கு தாங்கள் கரிசனையுடன் செயற்படவேண்டியுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'மேலும், 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் கால பரப்புரையின்போது, பல பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குவதாக வாக்குறுதியளித்தீர்கள். ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து மு.கா. தேர்தலில் போட்டியிட்டமைக்காக இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளன. இதனை வன்னிக்கும் திருகோணமலைக்கும் வழங்கினால், முஸ்லிம் காங்கிரஸின்; கோட்டையென வர்ணிக்கப்படும் அம்பாறை மாவட்ட போராளிகள் அதிருப்தியடைவார்கள் என்பதை நீங்கள் கருத்திற்கொள்வீர்களென நினைக்கிறோம். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி ஆகியவற்றுக்கு சுழற்சிமுறையில் வழங்குவதே சிறந்தது.

அரசியல் கட்சியை பலப்படுத்துவதற்காக கல்விமான்களுக்கோ அல்லது புத்திஜீவிகளுக்கோ தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படுகின்றது. அந்த வகையில், எங்களின் பார்வையில் கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் சிறந்த கல்விமானாகவும் அரசியல் ஞானியாகவும் காணப்படுகின்றார். இவ்வாறானவருக்கு கட்டாயமாக தேசியப்பட்டியலில் ஆசனம் வழங்கப்பட வேண்டுமென்பது அதிகமானோரின் எதிர்பார்ப்பாகும். எனவே, இம்முறை நீங்கள் தேசியப்பட்டியல் ஆசனத்தை சுழற்சிமுறையில் வழங்கும்போது, நிஸாம் காரியப்பருக்கு முதலிடம் கொடுக்கவேண்டும். குறைந்தது இரண்டு வருடங்களாவது அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்து,  மக்களுக்கு சேவை செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .