2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வட்டமடுப் பிரதேசத்தில் விவசாயச் செய்கைக்கு சென்ற விவசாயிகளிடம் விசாரணை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 24 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இம்முறை அம்பாறை, வட்டமடுப் பிரதேசத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான ஆரம்ப வேலைகளை மேற்கொள்வதற்காக இன்று வியாழக்கிழமை அங்கு சென்ற விவசாயிகளை வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, வட்டமடுப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மண் பண்படுத்தல், உழவு வேலை உள்ளிட்டவை தொடர்பிலும் தம்மிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக வட்டமடு விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.அபுல் காசிம் தெரிவித்தார்.

இது தொடர்பில் வட்டமடு விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் தெரிவிக்கையில்;, 'வட்டமடுப் பிரதேசத்திலுள்ள விவசாயக்காணிகளில் 1970ஆம் ஆண்டு முதல் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றோம். இதற்கான காணி அனுமதிப்பத்திரங்களும் விவசாயிகளிடம் உள்ளன. மேலும், ஒவ்வொரு போகத்தின்போதும்; இக்காணிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயச் செய்கைக்காக உரமானியத்தையும் குளங்களிலிருந்து நீரையும் பெற்றுக்கொள்கின்றோம்' என்றார்.  

'இது எமது காணிகள் என்பது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களமோ, விவசாயத் திணைக்களமோ எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில், வனபரிபாலனத்  திணைக்கள அதிகாரிகள் மட்டும் எமது விவசாயச் செய்கைக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துகின்றனர். யுத்த காலத்தின்போதும், எந்தவிதத் தடையுமின்றி  விவசாயச் செய்கையில் நாம் ஈடுபட்டிருந்தோம்.

முறையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளாது, இராணுவத்தினரின் உதவியைப் பெற்று வட்டமடு, வக்குமுட்டியா, திம்பிரிக்கொல்ல, குலாதுஸ்ஸ ஆகிய விவசாயக் காணிகளை வனபரிபாலனத் திணைக்களத்துக்குட்படுத்தி 2010ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டது. இதனை அடுத்து வட்டமடு, வேம்பையடிக்கண்டம், கொக்குழுவாய்க்கண்டம், மொறான வட்டிக்கண்டம், வட்டமடு புதுக்கண்டம் உள்ளிட்ட சுமார் 1,400 ஏக்கர் விவசாயக் காணிகளில் விவசாயம் செய்வதற்கு வனபரிபாலனத் திணைக்களம் தடை விதித்து வருகின்றது.

இவ்வாறு அரசாங்கத்தால் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்ட டிப்பமடு, பொத்தானை, பெரிய திராவ, பள்ளச்சேனை போன்ற காணிகளில் எந்தவித தடையுமின்றி விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது. வட்டமடுப் பிரதேச ஏழை விவசாயிகளுக்கு மாத்திரம்  விவசாயம் செய்வதற்கு தடையை ஏற்படுத்துவதற்கான காரணம் என்ன? இந்த நல்லாட்சியில் எமக்கான தீர்வை அரசாங்கம் உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .