2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விசாரணை அதிகாரிகளின் நியமனம் தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 21 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலான

கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட அரசாங்க  உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக முறைமைசார் விசாரணைகளை மேற்கொள்ளும் விசாரணை அதிகாரிகள் தொடர்பில் இம்மாகாணத்திலுள்ள அரசாங்க  ஊழியர்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, குறித்த விசாரணை அதிகாரிகளின் நியமனம் தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டுமென இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாணச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கும் பிரதம செயலாளருக்கும் இன்று வியாழக்கிழமை தான் கடிதம் அனுப்பியுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.
அக்கடிதத்தில், 'அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்ற சிலரே விசாரணை அதிகாரிகளாக கிழக்கு மாகாண சபையால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் சம்மந்தப்பட்டோருக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அண்மையில் கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அவரும் வழக்குத் தொடுநரான கல்வித் திணைக்கள நிர்வாக உத்தியோகஸ்தரும் சமூகமளித்திருந்தனர். ஆனால், கல்வி அமைச்சுக்கு குறித்த விசாரணை அதிகாரி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் விசாரணைக்கு வருகை தரவில்லையெனவும் இதன் காரணமாக அவர் இல்லாமலேயே விசாரணை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வறிக்கையின் அடிப்படையில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சும் சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு கட்டாய ஓய்வை வழங்கியது. இதனால், குறித்த ஆசிரியரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதுடன், அவர் உரிய வயதுவரை தொழிலில் நீடிக்கும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சில சம்பவங்களால் குறித்த சில விசாரணை அதிகாரிகளின் பக்கச்சார்பான நடவடிக்கைகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. நீதி வழங்குவதற்குப் பதிலாக தமது விசாரணை அதிகாரிப் பதவியை தக்கவைப்பதற்காக மாகாணசபை நிர்வாகத்தை திருப்திப்படுத்தும் வகையில், அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளமை இதன் மூலம் நிரூபணமாகின்றது.
இவ்வாறான விசாரணை அதிகாரிகள் கடமையாற்றும் நிலையில், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ஒருபோதும் நீதியை  எதிர்பார்க்க முடியாது.

எனவே, இது தொடர்பில் குறித்த விசாரணை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், நேர்மையானோரை விசாரணை அதிகாரிகளாக நியமிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .