2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாக்குறுதியை மீறி, சுனாமி வீட்டுத் திட்டத் தொகுதி குடியிறுப்பாளர்களிடம் மின் கட்டணம் செலுத்த பணிப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யூ.எல்.மப்றூக்)

 அட்டாளைச்சேனை, ஆலங்குளம் சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள குடியிருப்பாளர்களிடம் மூன்றரை வருடங்களின் பின்னர் பல லட்சம் ரூபாய்களை மின்சாரக் கட்டணமாகச் செலுத்துமாறு இலங்கை மின்சார சபை அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கட்டணத்தைச் செலுத்தாத பல வீடுகளின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டுத் திட்டத்தில் மக்களை குடியமர்த்தும் போது, மூன்று வருடங்களுக்கு குறித்த வீடுகளுக்கான மின் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை என்றும் அதற்கான ஏற்பாடுகளை - தாம் செய்துள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தம்மிடம் கூறியதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதேவேளை, மூன்றரை வருடங்களாக தமக்கு மின் கட்டணப் பட்டியல்கள் எதுவும் மின்சார சபையினால் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், கடந்த 2009 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில்தான் முதலாவது மின்பட்டியல் அனுப்பட்டதாகவும் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

சுனாமியினால் பாதிக்கப்பட்டு அன்றாடம் வாழ்வதற்கே கஷ்டப்படும் நிலையிலுள்ள தம்மிடம், இலட்சக் கணக்கான பணத்தொகையினை மின்சாரக் கட்டணமாக, ஒரே தடவையில் செலுத்துமாறு கோருவதை ஏற்க முடியாது என்கிறார் பாதிக்கப்பட்ட நபரொருவர்.

இவ்வாறானதொரு பெருந்தொகையினைச் செலுத்தத் தவறியதைக் காரணம் காட்டி, தமது வீடுகளுக்கான மின் இணைப்பினைத் துண்டித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அனுப்பப்பட்டுள்ள, மின் பட்டியலின் அடிப்படையில் நோக்கும் போது, சில குடியிருப்பாளர்களின் சராசரி மாதாந்தக் கட்டணத் தொகையானது சுமார் ஆறாயிரம் ரூபாவாக அமைந்துள்ளது. இந்த வீடுகளிலுள்ள மின் பாவனைகளோடு ஒப்பிடுகையில் இது ஓர் அசாதாரண தொகையாவே தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .