2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அம்பாறை மாவட்ட மக்களுக்கு சேவையாற்ற சுமந்திரன் நியமனம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

அம்பாறை மாவட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்குப் பொறுப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு   தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் இன்று தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேன அரசாங்கத் தரப்புடன் இணைந்து கொண்டதையடுத்தே, அம்பாறை மாவட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்காக எம்.ஏ.சுமந்திரனை நியமித்துள்ளதாகவும் இதற்கான தீர்மானம் நேற்று சனிக்கிழமை மாலை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆகிய அனைத்து நடவடிக்கைகளிலும் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரனே கலந்து கொள்வார் எனவும் பா.அரியநேந்திரன் குறிப்பிட்டார்.

பியசேன அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்கு எதிராக தமது கட்சி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் எழுத்து மூலம் பியசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்ததாகவும் ஆனால், இதற்கான பதில் அவரிடமிருந்து கிடைக்கவில்லை எனவும் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

இதற்கிடையில், தாம் கொள்கை ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் பியசேனவுக்கு வாக்களித்ததாகவும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட மக்கள் கோருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கல்முனைப் பிரதேசத்திற்கு சென்றுள்ள நிலையில், மாலை   காரைதீவுக்கு தாம் செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன் நாளை திங்கட்கிழமை அம்பாறை மாவட்ட கட்சி அலுவலகங்களுக்கு பயணிக்கவுள்ளதாகவும் பா.அரியநேந்திரன் எம்.பி தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் உட்பட மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், பொத்துவில் ஊறணி, சாகமம், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களை சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X