2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யானை பாதுகாப்பு வேலிக்கு பதிலாக காணி அனுமதிப்பத்திரம் குறித்து ஆராய்வதை ஏற்க முடியாது

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யூ.எல். மப்றூக்)

வனவிலங்குத் திணைக்களத்தினர் அஷ்ரப் நகரிலுள்ள பொதுமக்களின் காணிகளினூடாக யானைப் பாதுகாப்பு வேலியினை அமைப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அப்பகுதிக்கு வந்திருந்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, குறித்த விடயத்தைப் பற்றிப் பேசாமல் பொதுமக்களின் காணிகளுக்கு அனுமதிப் பத்திரங்கள் உள்ளனவா என ஆராயும் முயற்சியில் ஈடுபட்டமையானது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என்று அம்பாறை மாவட்ட மு.காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான பைசால் காசிம் தெரிவித்தார்.

அஷ்ரப் நகரிலுள்ள பொதுமக்களின் காணிகளினூடாக வனவிலங்குத் திணைக்களத்தினர் யானைப் பாதுகாப்பு வேலி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதையடுத்து, கடந்த புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் அப்பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

அங்கு வைத்து கருத்துத் தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அஷ்ரப் நகரிலுள்ள பொதுமக்களின் காணிகளினூடாக வனவிலங்குத் திணைக்களத்தினர் யானை வேலிகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை கடந்த அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தின் போது நான் சுட்டிக் காட்டியதோடு, அந்த முயற்சினைத் தடுக்குமாறு கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோளொன்றினையும் முன்வைத்திருந்தேன்.

இதனைக் கவனத்திற் கொண்ட அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, இவ்விடயம் குறித்து உரிய பகுதிக்குச் சென்று ஆராயுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கட்டளையிட்டிருந்தார்.

இதற்கிணங்க, நேற்று (புதன்கிழமை) அஷ்ரப் நகருக்கு வந்திருந்த அரசாங்க அதிபர், மக்களின் காணிகளினூடாக வனவிலங்குத் திணைக்களத்தினர் யானை வேலி அமைக்கவுள்ள விடயம் குறித்துப் பேசாமல், இங்குள்ள மக்களிடம் அவர்களுடைய காணிக்கான அனுமதிப் பத்திரங்கள் உள்ளனவா எனக் கேட்டு, அதுபற்றியே ஆராய்ந்து கொண்டிருந்தமையானது விசனம் தரும் நடவடிக்கையாகும்.

மக்களின் பிரச்சினையினைப் பார்வையிடுவதற்காக வந்திருந்த அரசாங்க அதிபர், மக்களைகளிடம் குற்றம் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள் என்றார்.  
இதேவேளை, அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சியினையினைத் தீர்ப்பதற்காக, அரச உயர் மட்டத்தில் ஒரு குழு அமைக்கப்படுதல் வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .