2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நீர், மின்சார துண்டிப்பி|ற்கு எதிராக சுனாமி வீட்டுத் திட்ட குடியிறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தமது வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதிக்கான மின்னிணைப்பு மற்றும் குடிநீர் வழங்கல் ஆகியவை துண்டிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த,கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட குழுவினரின் செயலைக் கண்டிக்கும் வகையில், கல்முனைப், இஸ்லாமாபாத் சுனாமி வீடமைப்புத் திட்டத்திலுள்ள குடியிருப்பாளர்கள் இன்று மாலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமாபாத் குடியிருப்பாளர் ஒருவர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

'மேற்படி இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்தைப் பராமரிப்பதற்காக, வீடமைப்பு அதிகாரசபையின் கீழ் இயங்கும் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபை  இந்த வீட்டுத்திட்டத்திலுள்ளவர்களைக் கொண்டு ஒரு குழுவினை அமைத்து, அந்தக் குழுவினூடாகவே பராமரிப்பு விடயங்கள் இடம்பெறும் எனக் கூறியிருந்தது.

அதற்கிணங்க வீட்டுத் திட்டத்திலுள்ள குடியிருப்பாளர்கள் தாம் பயன்படுத்தும் மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றுக்குரிய கட்டணங்களைச் செலுத்துவதற்கான பணத்தினை குறித்த குழுவினரிடம் வழங்கினார்கள்.

இதேவேளை, இந்த வீட்டுத் திட்டப் பராமரிப்புக்காக வங்கியில் 50 லட்சம் ரூபாய் பணம் வைப்புச் செய்யப்பட்டு அதற்குரிய வட்டியாக மாதாந்தம் 66 ஆயிரம் ரூபாய் வருமானமும் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், மேற்படி வீட்டத் திட்டத்தின் ஒரு பகுதி மின்சாரத்தை மின்சார சபையினர் துண்டித்து விட்டனர். இதனால் வீடுகளுக்கான குடி நீரையும் பெற முடியாமல் உள்ளது.

இது குறித்து நாம் மின்சார சபையினரிடம் விசாரித்த போது, மின்சார சபைக்கு எமது வீட்டுத்திட்ட குடியிருப்பாளர்கள் 11 லட்சம் ரூபாவினை செலுத்த வேண்டியிருப்பதாகத் கூறுகின்றார்கள்.

அதேபோன்று, நீர்வழங்கல் அதிகார சபையினருக்கும் நாம் கிட்டத்தட்ட 06 லட்சம் ரூபாவினைச் செலுத்த வேண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எமக்கான மின்சாரம் மற்றும் குடிநீருக்கான கட்டணங்களை பராமரிப்புக் குழுவினரிடம் மாதா மாதம் நாங்கள் சரியாகச் செலுத்தி விட்டோம். அதற்காக அவர்கள் எமக்கு வழங்கிய பற்றுச் சீட்டும் எம்மிடம் உள்ளது.

எனவே, இதில் பாரியதொரு மோசடி இடம்பெற்றுள்ளது. மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பணமும், எமது வீட்டுத் திட்டப் பராமரிப்புக்காக வங்கியிலிடப்பட்டுள்ள பணத்துக்குக் கிடைத்த லாபமும் எங்கே போயிற்று? ஏன் எமக்கான மின்சாரக் கட்டணம் மற்றும் குடிநீர்க் கட்டணங்கள் செலுத்தப்படவில்லை? என்பதைக் கேட்டே நாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

அதேவேளை, மேற்குறிப்பிட்ட 50 லட்சம் ரூபாய் தொடர்பான வங்கிக் கணக்குக் காசோலையில் கல்முனை பிரதேச செயலாளரும் கையொப்பம் இடுவதற்கான அதிகாரமுடையவராக உள்ளார்.

எனவே, தற்போது இடம்பெற்றுள்ள மோசடி குறித்து கல்முனை பிரதேச செயலாளர் மௌனமாக இருக்கக் கூடாது' என்றார்.

மேற்படி இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்தினை வெளிநாடொன்றில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் தனவந்தர் ஒருவர் தனது சொந்தச் செலவில் நிர்மாணித்துக் கொடுத்ததோடு, இந்த வீட்டுத் திட்டத்தைப் பராமரிப்பதற்காக 50 இலட்சம் ரூபாய் பணத்தினையும் வழங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தனவந்தர் வழங்கிய மேற்படி பணத் தொகையே வங்கியில் வைப்பிலிடப்பட்டு, அத்தொகைக்கான வட்டியும் பெறப்படுகிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பில் தமக்கு சரியானதொரு தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரி, இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட குடியிருப்பாளர்கள், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X