2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இஸ்லாமாபாத் சுனாமி வீட்டு திட்ட குடியிருப்பாளர்களின் ஆர்ப்பாட்டம் தனிப்பட்ட குரோதம் காரணமானது

Super User   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை இஸ்லாமாபாத் சுனாமி வீட்டுத் திட்ட குடியிருப்பாளர்களில் சிலர் கடந்த செவ்வாய்கிழமை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடத்திய ஆர்ப்பாட்டமானது, தனிப்பட்ட குரோதங்களைக் கொண்டது எனவும் அவர்களின் குற்றச் சாட்டுக்கள் அடிப்படை ஆதாரங்களற்றவை எனவும், கூட்டாதன அதிகாரசபையின் கீழ் இயங்கும் இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவின் தலைவர் ஏ. நிஸார் 'தமிழ் மிரருக்குத்' தெரிவித்தார்.

கடந்த செய்வாய்கிழமையன்று கல்முனை இஸ்லாமாபாத் சுனாமி வீட்டுத் திட்டக் குடியிருப்பாளர்கள் சிலர், தமது வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதிக்கான மின்னிணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவை துண்டிக்கப்படுவதற்கு காரணமானவர்கள் எனக்கூறி, இஸ்லாமாபாத் கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவினருக்கெதிராக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தி, செய்வாய்கிழமை 'தமிழ் மிரர் இணையத்தளத்தில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, இஸ்லாமாபாத் கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவின் தலைவர் ஏ. நிஸார் மேற்கண்டவாறு கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்ளூ

"எமது வீட்டுத்திட்டக் கூட்டாதனக் குழுவானது, இலங்கை கூட்டாதன அதிகார சபையின் கீழுள்ள ஒரு அமைப்பாகும். அதேவேளை, இந்தக் குழுவினை நாம் சட்டரீதியாகப் பதிவு செய்துள்ளோம். குறித்த குழுவை நாம் பொறுப்பேற்ற போது, 22 லட்சத்துக்கும் மேற்பட்டதொரு தொகை குழுவின் பெயரில் கடன் இருந்தது. முன்னர் இருந்த நிருவாகத்தினர் இந்தக் கடனை வைத்து விட்டுச் சென்றிருந்தார்கள்.

அதேபோன்று, நாம் இந்தக் குழுவினைப் பாரமெடுத்ததன் பின்னர், இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளைச் செய்து கொடுத்திருக்கின்றோம்.

குழுவை நாங்கள் கையேற்றபோது, இலங்கை மின்சாரசபைக்கும் லட்சக் கணக்கான பணம் நிலுவையாகச் செலுத்த வேண்டியிருந்தது.

அந்தவகையில் நாங்கள் - வீட்டுத் திட்டத்தின் பராமரிப்பு வேலைகளைக் கவனித்துக் கொண்டே கடன்களையும் அடைக்க வேண்டியிருந்தது.

இதேவேளை, எமது வீட்டுத்திட்டத்தின் பேரில் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள 50 லட்சம் ரூபாவுக்கும் மாதாந்தம் கிடைத்து வந்த சுமார் 63 ஆயிரம் ரூபாய் பணத்தொகை, திடீரென 35 ஆயிரம் ரூபாயாக வங்கியினால் குறைக்கப்பட்டது. இதனால், வீட்டுத் திட்டத்தின் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிப்பது கடினமாகப் போய் விட்டது. எனவேதான் மின்சார சபையினருக்குச் செலுத்த வேண்டியிருந்த பழைய நிலுவையை வழங்க முடியாமல் போய்விட்டது.

இந்தக் காரணங்களால்தான் வீட்டுத் திட்டத்துக்கான ஒரு பகுதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆயினும், இந்த துண்டிப்பால் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாதவாறு நாம் மாற்று நடவடிக்கைகளை செய்திருக்கின்றோம்.

இதேவேளை, எமது கூட்டாதனக் குழுவின் வங்கி நடவடிக்கை தொடர்பான வரவு செலவுகள் கல்முனை பிரதேச செயலாளருடைய மேற்பார்வையின் கீழ்தான் இடம்பெறுகிறது. மட்டுமன்றி, எமது மொத்த வரவு – செலவுக் கணக்குகள் தொடர்பான விபரங்களை நாம் அச்சிட்டு, ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் வழங்கியும் இருக்கின்றோம்.

இவைதவிர, தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கீழ் இயங்கும் கூட்டாதன அதிகாரசபையின் கீழ்தான் எமது குழு இயங்குகின்றது. குழுவின் வரவு – செலவு உள்ளிட்ட அத்தனை செயற்பாட்டு விடயங்களையும் நாம் கூட்டாதன அதிகாரசபைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

எங்களுடைய கணக்கறிக்கையில் ஏதாவது பிழைகள் இருந்தால், கூட்டாதன அதிகாரசபை எங்களைக் கேள்விக்குட்படுத்தும், பிழைகள் கண்டால் எமக்கெதிராக நடவடிக்கையெடுக்கும்.

ஆக, இத்தனை சட்டதிட்டங்களுக்கு மத்தியில் இயங்கும் ஒரு குழுவின் மீது, எழுந்தமானமாக சிலர் கூறும் குற்றச்சாட்டுக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. செவ்வாய்கிழமையன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டமானது, எங்கள் மீது தனிப்பட்ட குரோதம் கொண்ட சிலரால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்" என்றார்.   

இதன்போது, மேற்படி இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட கூட்டாதனக் குழுவின் பொருளாளர் மற்றும் செயலாளர் ஆகியோரும் விளக்கமளித்தனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .