2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திண்மக் கழிவுகளை அகற்றுதல் தொடர்பிலான விழிப்புணர்வு

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஆரோக்கியமான வாழ்வுக்கு சுத்தமான சூழலைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். சுத்தமான சூழலை உருவாக்குதல் என்பது நமது வீடுகளிலும், அலுவலகங்களிலும், ஏனைய பிற இடங்களிலும் நாளாந்தம் உருவாகும் திண்மக் கழிவுகளை அகற்றுவதில்தான் தங்கியுள்ளது.

ஆனால், திண்மக் கழிவகற்றல் என்பது இன்று நகர்ப்புறங்களில் முக்கியமானதொரு பிரச்சினையாக மாறியுள்ளது. சூழலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் ஏற்படும் போதுதான் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் எனும் விடயத்தில் நம்மால் வெற்றிகாண முடியும்.

இவ்வாறு வளங்கள் அபிவிருத்தி ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ், யுனொப்ஸ் நிறுவனம் அம்பாறை மாவட்டத்தில் செயற்படுத்திவரும் திண்மக் கழிவகற்றல் வேலைத் திட்டத்தில் மக்கள் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான ஆலோசனையினை வழங்கிவரும் தமது வளங்கள் அபிவிருத்தி ஆலோசனை நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் திண்மக் கழிவகற்றல் தொடல்பில் மக்கள் விழிப்புணர்வு பெறுவதன் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை மாலை காரைதீவிலுள்ள அம்பாறை மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போதே, அந்நிறுவனத்தின் தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாம் சுத்தமாக இருந்தாலும் அநேகமாக நமது சூழல் சுத்தமாக இல்லை. இதனால், மனித சமுதாயம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை முகம்கொள்ள வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

ஒரு நாட்டின் அபிவிருத்தி தொடர்பான கணிப்பீட்டு நியமங்களில் சுத்தமான நகரங்களும் கணக்கில் எடுக்கப்படுகின்றது. சுத்தமற்ற நகரங்களைக் கொண்டுள்ள ஒரு தேசத்தை நாம் அபிவிருத்தியடைந்த ஒன்றாகக் கருத முடியாது.

திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ நடவடிக்கையில், பொதுமக்களின் பங்களிப்பின்றி வெற்றிபெற முடியாது. உள்ளுராட்சி மன்றங்கள் இத்திட்டத்தினை மேற்கொண்டாலும் மக்களே இதன் பங்காளிகளாக இருக்கின்றனர்.

திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத் திட்டம் தொடர்பில் மக்கள் தற்போது சிறந்த வழிப்புணர்வினைப் பெற்றுள்ளார்கள். உள்ளுராட்சி மன்றங்கள் மக்களுக்கு எதைச் செய்யவேண்டும் என்பதை மக்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதை உள்ளுராட்சி மன்றங்கள் அறிந்துள்ளன. அதைப்போலவே, தமக்கு உள்ளுராட்சி மன்றங்கள் எதைச் செய்ய வேண்டும் என மக்களும் தெரிந்து வைத்துள்ளார்கள் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, வளங்கள் அபிவிருத்தி ஆலோசனை நிறுவனத்தின் பிராந்தியத் திட்டத் தலைவர் ஏ.எஸ்.எம். நௌசாத், திட்ட உத்தியோகத்தர் எம்.ஏ. அக்பர் அலி ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்டத்தில் யுனொப்ஸ் நிறுவனம் நடைமுறைப்படுத்திவரும் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மக்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஆலோசனையினை வழங்கிவந்த வளங்கள் அபிவிருத்தி ஆலோசனை நிறுவனத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .