2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்ந்து அசமந்தம்

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளரின் உத்தரவினை உதாசீனப்படுத்தும் வகையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் தொடர்ந்தும் சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் சேகரிக்கும் குப்பைகளை அட்டாளைச்சேனை பாவங்காய் வீதியோரங்களில் கொட்டி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை சேகரிக்கும் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கென ஐரோப்பிய ஒன்றியத்தின் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் யுனெப்ஸ் நிறுவனம் கழிவுப் பொருள் சேகரிக்கும் திட்டமொன்றை ஆலிம் நகர் பகுதியில் அமைத்துக் கொடுத்துள்ள போதும், அப்பிரதேச சபையினர் குறித்த குப்பைகளை பாவங்காய் வீதியின் ஓரங்களில் கொட்டி வருவதாக, தமிழ்மிரர் இணையத்தளம் உள்ளிட்ட ஊடகங்கள் சுட்டிக் காட்டியிருந்தன.

இதனைக் கவனத்திற் கொண்ட அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷார், வீதியோரங்களில் குப்பை கொட்டுவதைத் தவிர்க்குமாறும், இது தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் குறித்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

ஆனாலும், வீதியோரங்களில் குப்பைகளைக் கொட்டுவதை அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் நிறுத்தியதாக இல்லை.

எனவே, இவ்விடயம் அம்பாரை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளரின் கவனத்துக்கு மீண்டும் பொதுமக்களால் கொண்டுவரப்பட்டது.

இதன்போது, பிரதேச சபையினருடன் தான் தொடர்பு கொண்டு உடனடியாக வீதியோரங்களில் குப்பை கொட்டுவதை நிறுத்துமாறு கூறுவதாக உதவி உள்ளுராட்சி ஆணையாளர் உதியளித்திருந்தார்.

இதன் பின்னர், ஏற்கனவே குப்பை கொட்டப்பட்டிருந்த இடத்தினை இயந்திரங்கள் மூலம் சீராக்கிவிட்டு, சில நாட்கள் குப்பைகளை வீதியில் கொட்டாமல் தவிர்த்து வந்த பிரதேச சபையினர் தற்போது மீண்டும், அதே வீதியின் ஓரங்களில் குப்பைகளைக் கொட்டத் தொடங்கியுள்ளனர்.

சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செயலை நிறுத்துமாறு ஊடகங்களும், மேலதிகாரியும் பல தடவை கூறிய போதிலும், அதைக் கணக்கில் எடுக்காமல் தொடர்ந்தும் அதே பிழையைச் செய்துவரும் இந்தப் பிரதேச சபையினரை யார் கண்டிப்பது என பொதுமக்கள் கவலையோடு கேட்கின்றனர்.

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .