2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அஷ்ரப் நகர முஸ்லிம்களின் காணி அனுமதி ரத்து இனவாத செயலாகும்:தவிசாளர் அன்சில்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அஷ்ரப் நகரில் உள்ள முஸ்லிம் மக்களின் காணிகளின் அனுமதிப் பத்திரத்தினை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ரத்துச் செய்திருப்பது இனவாதச் செயலாகும் என்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தெரிவித்துள்ளார்.

அஷ்ரப் நகர மக்களின் காணிகளைப் போல் தீகவாபியிலுள்ள 184 சிங்களவர்களிடமும் 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படாத காணி அனுமதிப் பத்திரங்கள் உள்ளன.

அப்படியென்றால், அஷ்ரப் நகர மக்களின் காணி அனுமதியை ரத்துச் செய்துள்ளமை போல், தீகவாபியிலுள்ளவர்களின் அனுமதிப் பத்திரங்களையும் இதேகாலத்தில் அரசாங்க அதிபர் ரத்துச் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப் நகர மக்களில் 31 பேரின் காணிகளுடைய அனுமதிப் பத்திரங்களை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர அண்மையில் ரத்துச் செய்வதாகத் தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இவ்விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே தவிசாளர் அன்சில் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'அஷ்ரப் நகரத்திலே வாழுகின்ற மக்கள் பாமர மக்கள். யுத்த சூழ்நிலை மற்றும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக அந்த மக்களால் தமது காணிகளுக்குரிய அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்க முடியாமல் போய் விட்டது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால், இந்த மக்களில் 31 பேருடைய காணி அனுமதிப்பத்திரங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் அரசாங்க அதிபர் தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார். பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டதன் பிறகு பிரதேச செயலாளர் அல்லது காணி ஆணையாரால் மட்டுமே இவ்வாறு அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்ய முடியும்.

அந்த வகையில், அம்பாறை மாவட்ட அரசாங் அதிபர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதோடு, தன்னுடைய இனவாத முகத்தினையும் இவ்விடயத்தில் காட்டியிக்கின்றார்.

இவ்வாறு காணி அனுமதிப்பத்திரத்தினை அரசாங்க அதிபர் ரத்துச் செய்ய வேண்டுமாக இருந்தால் கூட, அஷ்ரப் நகரில் உள்ள காணிகளைப் போல், தீகவாபியிலுள்ள 184 சிங்களவர்களிடமும் 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படாத காணி அனுமதிப் பத்திரங்கள் உள்ளன.

அப்படியென்றால், அஷ்ரப் நகர மக்களின் காணி அனுமதியை ரத்துச் செய்துள்ளமை போல், தீகவாபியிலுள்ளவர்களின் அனுமதிப் பத்திரங்களையும் இதே காலத்தில் அரசாங்க அதிபர் ரத்துச் செய்திருக்க வேண்டும்.

அவ்வாறில்லாமல், முஸ்லிம் மக்களின் காணிகளினுடைய அனுமதிப் பத்திரங்களை மட்டும் தெரிவு செய்து ரத்துச் செய்திருப்பதை இனத் துவேசச் செயலாகவே எம்மால் பார்க்க முடிகிறது.

 

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் இந்தச் செயலானது திட்டமிட்ட இனத்துவேசச் செயல் என்பதைத் தவிர வேறு எதனையும் என்னால் கூற முடியாது' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • farzan.ar Tuesday, 21 December 2010 03:49 PM

    ஆண்டாண்டு காலமாக அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் மு.கா.விற்கே தங்களின் அரசியல் அதிகாரத்தினைக் ஒப்படைக்கின்றனா். தற்போது மு.கா.வும் அரசாங்கத்தின் பங்காளியாக ஒட்டிக்கொண்டு இருக்கிறது. தவிசாளா் அன்சில் இது தொடர்பாக மக்கள் போராட்டங்களை அரசாங்க அதிபரின் நடவடிக்கைக்கு எதிராக ஒன்று திரட்டலாமே..அரசியல் மேல் மட்டத்தின் கவனத்தை ஈா்க்கலாமே..

    மௌனமாய் இருப்பதற்காகவா இந்தக் கட்சிகளிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. அஷ்ரப் நகர மக்கள் பாமரா்கள், ஏழைகள். அதுதான் அரசியல்வாதிகளுக்கு நல்ல இலாபம் தரும் விடயம் போல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .