2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'திராய்க்கேணி பிரதேசம் முன்மாதிரியாக திகழவேண்டும்'

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 22 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை மாவட்டத்தில் மூன்று சமூகங்களுக்கும் முன்மாதிரியான  பிரதேசமாக அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட திராய்க்கேணி பிரதேசம் திகழ வேண்டும். இதற்காக என்னால் இயன்ற சகல உதவிகளையும் செய்யவுள்ளேன் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீக்ப்பாசன, கிராமிய, மின்சார வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காக காணிகளை வழங்கிய குடும்பங்களுக்கு திராய்க்கேணி பிரதேசத்தில் வழங்கப்பட்ட மாற்றுக் காணிகளில் வீதி, மின்சாரம், வீடமைப்புத்திட்டம்; என்பவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கில் முதற்கட்டமாக வீதியினை அங்குரார்ப்;பணம் செய்யும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இந்த திராய்க்கேணி பிரதேசத்தை உருவாக்கிய எங்களுடைய பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், எமது தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரின் கனவானது இந்தப் பிராந்தியம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமைப் பிரதேசமாக ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதே. இறைவனின் உதவியால் அதனை நாம் இன்று நிஜமாக்க முடிந்துள்ளது.

இங்குள்ள மக்களுடைய சகல குறைபாடுகளையும் நாங்கள் நிவர்த்தி செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.  அதனை நிறைவேற்றக்கூடிய பொறுப்புக்களை எங்களிடம் உங்கள் மூலமாக வழங்கியுள்ளான். நாங்கள் அதனை நிறைவேற்றியாக வேண்டும்.
கட்சி வேறுபாடுகள், இன,மத,மொழி வேறுபாடுகளை மறந்து பணியாற்றக்கூடிய பக்குவத்தை இறைவன் எங்களுக்கு வழங்கியுள்ளான். ஆகவே உங்களுக்காக நாங்கள் பணியாற்றும்போது நாங்கள் எதிர்பார்ப்பது உங்களுடைய பிரார்த்தனைகள் மாத்திரம்தான். அது எங்களை பாதுகாக்கும்' என்றார்.

பாலமுனை – 06 திராய்க்கேணி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஒலுவில் துறைமுக மாற்றுக் காணிகளின் குழுச் செயலாளர் இஷட்.தஸ்லீம் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில்  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய பிரதம பொறியியலாளர் எம்.ஐ.எம்.றிஸ்வி, வீடமைப்பு அதிகாரசபையின் பிராந்திய முகாமையாளர் கனகசூரியம், இலங்கை துறைமுக அதிகாரசபையின் சிரேஷ்ட முகாமையாளர் யூ.எம்.நஜீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .