2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கடமை தவறும் வைத்தியர்களால் அவதியுறும் நோயாளர்கள்

Kogilavani   / 2013 ஜனவரி 04 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் கடமைக்கு உரிய முறைப்படி சமூகளிப்பதில்லை என்றும், உள்ளக நோயாளர் பிரிவிலுள்ளோருக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு இரவு வேளைகளில் வைத்தியசாலையில் தங்குவதில்லை எனவும், பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வெளி மற்றும் உள்ளக நோயாளர்களுக்கான மருந்துகள் சிற்றூழியர்களைக் கொண்டு வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.  

2002 ஆம் ஆண்டு ஆண்டு கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலையானது 2011 ஆம் ஆண்டு மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது. ஆனாலும், ஒரு வருடம் கடந்தும் இந்த வைத்தியசாலையின் பெயர்ப் பலகை கூட, பழைய கிராமிய வைத்தியசாலை எனும் பெயருடனேயே காணப்படுகின்றது.

இந்த வைத்தியசாலையில் 4 வைத்தியர்கள் உள்ளனர். ஆனாலும், இவர்கள் உரிய நேரத்தில் தமது கடமைக்குச் சமூகமளிப்பதில்லை என்று இங்குள்ள பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான உள்நோயாளர் விடுதி உள்ளது. இவ்வாறான உள்நோயாளர் பிரிவுகள் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் 24 மணி நேரமும் வைத்தியர்கள் கடமையில் இருத்தல் வேண்டும். கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் கடந்த வருடம் 29 நவம்பர் 2012 ஆம் திகதியன்று வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் இவ்விடயத்தினை வலியுறுத்தியிருந்தார்.

ஆயினும், அட்டாளைச்சேனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் உள்நோயாளர் பிரிவு இருந்தும், அங்கு இரவு வேளைகளில் வைத்தியர்கள் தங்குவதில்லை என முறையிடப்படுகிறது. இதேவைளை, வைத்தியர்கள் தமது கடமைக்கு உரிய நேரத்துக்குச் சமூகளிப்பதில்லை எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த முறைப்பாடுகளை அடுத்து, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு வார இறுதி நாளொன்றில் காலை 11.30 மணியளவில் நாம் சென்றிருந்த வேளையிலும், அங்கு வைத்தியர்கள் எவரும் இருக்கவில்லை. அதேவேளை, வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பரிசோதிப்பதற்கும் அங்கு வைத்தியர்கள் காணப்படவில்லை.

இதேவேளை, இந்த வைத்தியசாலையில் மருந்தாளர்கள் எவரும் இல்லை. இதனால், இங்குள்ள சிற்றூழியர்களே வெளி மற்றும் உள் நோயாளர்களுக்கான மருந்துகளை வழங்கி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தானதொரு செயற்பாடாகும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மருந்துகள் பற்றிய எவ்வித அறிவுமற்றவர்களைக் கொண்டு நோயாளர்களுக்கான மருந்துகளை வழங்குவதென்பது - மனித உயிர்களோடு விளையாடும் பொறுப்புணர்வற்ற செயற்பாடாகும் என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, உள்நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் அவர்களுக்கான மருந்துகளை வழங்குவதற்குமான வேலைகளையும் சிற்றூழியர்களே செய்து வருகின்றனர். தாதியொருவர் செய்ய வேண்டிய கடமைகளை – தாதியொருவருக்குரிய அறிவோ, அனுபவமோ அற்ற சிற்றூழியர் எவ்வாறு நிறைவேற்ற முடியும் எனவும் பொதுமக்கள் வினவுகின்றனர்.

இந்த நிலையில், குறிப்பிட்ட வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களை உத்தியோகபூர்வமாகத் தொடர்பு கொள்வதற்கோ அல்லது அவர்கள் கடமையில் இருப்பதை மேலதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கோ வைத்தியசாலையில் தொலைபேசி வசதிகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இங்குள்ள வைத்தியர்களும், ஊழியர்களும் உரிய நேரத்துக்கு கடமைக்குச் சமூகமளிப்பதில் பொடுபோக்குடன் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இதேவேளை, இங்குள்ள வைத்தியர்கள் சிலரும், ஊழியர்களும் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து அதாவது 10 வருடங்களுக்கும் மேலாக எவ்வித இடமாற்றங்களுமின்றி, தொடர்ந்து இங்கு கடமையாற்றி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சிலர் தம்பதியர்களாக இங்கு தொழில் செய்து வருகின்றதாகவும், அதனூடாக வைத்தியசாலையின் வளங்களை தமது குடும்பத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வதாகவும் பொதுமக்களால் முறையிடப்படுகிறது.

எனவே, அட்டாளைச்சேனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் அலட்சியப்போக்குடன் செயற்படும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களை அங்கிருந்து உடனடியாக இடமாற்றம் செய்வதோடு, அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோரை அந்த வைத்தியசாலைக்கு நியமிக்குமாறும், வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வளப் பற்றாக் குறைகளை நீக்குமாறும் இப் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.





You May Also Like

  Comments - 0

  • ameen Monday, 07 January 2013 07:44 AM

    இந்த வைத்தியர்கள் அரசாங்க சம்பளத்தை வாங்கிக்கொண்டு வீட்டில் மருந்து வியாபாரம் செய்கின்ரார்கள்

    Reply : 0       0

    fasneen saheed Monday, 07 January 2013 01:56 PM

    இப்படியான வைதியர் யார் என்பது தெரிய வந்தால் அவர்கல் மீது சரியான சட்ட நடவடிக்ககை எடுக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X