2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மு.கா. சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது: சிராஸ்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 25 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,ஏ.எஸ்.எம்.முஜாஹித்,எம்.எஸ்.எம்.றம்ஸான்,  ஏ.ஜே.எம்.ஹனிபா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருவதாக கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர்   சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

ஜனநாயக ர்Pதியாக மக்கள் தனக்கு வழங்கிய அத்தனை அதிகாரங்களையும் தந்திரோபாயமாக பறித்தெடுத்துவிட்டு, வெறும் பாலைவனத்தில் பரிதவிக்க விட்டுச்சென்றுள்ளதாகத் தெரிவித்த அவர்,  அந்த பாலைவன வழியில் வந்த குதிரைமேல் ஏறி மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடர்வதாகவும் கூறினார்.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் திங்கட்கிழமை (24) உத்தியோகபூர்வமாக சிராஸ் மீரா சாஹிப் இணைந்துகொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'ஒருவர் தான் பிறந்த பிரதேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் தனது பிரதேசத்தைப் பற்றி சிந்திப்பதும் பிரதேசவாதமாக கருதமுடியாது. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையொன்று வேண்டுமென்ற கோரிக்கை இன்று, நேற்று உருவான விடயமல்ல. அது பல வருடங்களுக்கு முன்னராக வலுப்பெற்று வருகின்றது.

சாய்ந்தமருது மக்களின் மிக நீண்டகால தனியான உள்ளுராட்சிமன்றக் கோரிக்கைக் கனவை நிறைவேற்றுவதற்காகவே இறைவன் என்னை இவ்வாறு செய்துள்ளதாக  நான் திடமாக நம்புகிறேன். இப்பிரதேச மக்களின் அக்கனவை மிக விரைவில் நிறைவேற்றுவதற்கு தேசிய காங்கிரஸின் தலைமை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா எமக்கு பக்கபலமாக இருப்பாரொன்றும் நம்புகிறேன்.

மு.கா. கட்சிக்குள் வந்து எனது அபார முயற்சியின் காரணமாக அதிகளவான சேவைகளை வழங்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறான செயற்பாடுகள் அக்கட்சியின் தலைமைக்கும் கட்சியிலுள்ள சிலருக்கும் எனது தீவிரமான அரசியல் பிரவேசம் ஒவ்வாமையாகவே இருந்து வந்தது. அதனாலேயே கட்சிக்கு நான்  ஒரு புற்றுநோயென்று விமர்சனம் செய்தார்கள்.

கல்முனை மாநகர சபைக்கு நான் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து பிரதேசவாதங்களையும் அரசியல் பிரிவினைகளையும் சிலர் விதைக்கத் தொடங்கினர். இவ்வாறான நிலையில் நான் மேயராக இருந்த காலப்பகுதியில் பட்ட கஷ்டங்களுக்கும் அவமானங்களுக்கும் அளவே கிடையாது. இவ்வாறான பிரிவினைகளுக்கும் கருத்துக்களுக்கும் மு.கா. தலைமைத்துவமும் பக்கபலமாக செயற்பட்டு குழி பறிக்கும் நடவடிக்கையை காலாகாலமாக தமது அரசியல் சுய இலாபங்களுக்க்க செய்து வருகின்றது.

எனக்கு மக்கள்  04 வருடங்களுக்கான  ஆணையை வழங்கி இருந்தனர். எனது மேயர் பதவி இராஜினாமாவுக்கு முன்னர் நானும் எனது பிரதேச ஆதரவாளர்களும் பள்ளிவாசல்களின் தலைவர்களும் கால அவகாசம் கேட்டிருந்தோம். ஒரு நாள் கூட வழங்கமுடியாதென்று தெரிவித்த  அமைச்சர் ரவூப் ஹக்கீம், பின்னர் ஏற்பட்ட சந்திப்பொன்றில் என்னை கட்டி அணைத்து தயவுசெய்து உடன் இராஜினாமாச் செய்யுங்கள். இது எனது மானப் பிரச்சினையாகவுள்ளது. உங்களுக்கு கட்சியில்  அதிகாரங்களுடன் கூடிய பதவிகளை வழங்கவுள்ளேன்.  இவைகள் எல்லாம் வெறும் பொய்பச்சாகவும் கபடநாடகமாவுமே காணப்பட்டன' என்றார்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா உரையாற்றுகையில்,

'அம்பாறை மாவட்டத்தின் மூத்த கிராமங்களில் ஒன்றாக சாய்ந்தமருது உள்ளது. ஒரு பிரதேசமானது காலத்தின் தேவை அறிந்து பிரிந்து செல்வதில் எவ்வாறான தவறுகளும் காணமுடியாது. கடந்த காலங்களில் இவ்வாறே தமது தேவைகளை உணர்ந்து ஒன்றாக இருந்து வந்த பல பிரதேசங்கள் தனி நிர்வாக அலகுகளாக பிரிந்து செயற்பட்டு வருகின்றது.

தலைவர் மர்ஹூம் அஸ்ரப் பிரதேச வாதங்களை உடைத்தெறிவதில் கடுமையாக உழைத்து அதில் வெற்றி கண்டு மக்களை ஒற்றுமைப்படுத்தினார். ஆனால், இன்றைய மு.கா. தலைமை தமது அரசியல் சுய இலாபங்களுக்காக பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்ட கருத்துக்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கி பிரதேச வாதங்களை வளர்த்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

அது மட்டுமல்லாமல் தேர்தல் காலங்களின்போது இனவாத கருத்துக்களை பேசி மக்களை இக்கட்டான சூழ்நிலைக்குள் மாட்டிவிடுகின்றார். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது பள்ளியா? மஹிந்தவா? எனும் கோஷங்களை கிளப்பியதும் மக்கள் பள்ளி என்று வாக்களித்தார்கள். அந்த வெற்றியுடன் முதலில் மஹிந்தவிடம் சென்றவர் மு.கா.தலைவரே ஆகும். இப்படியான ஏமாற்று நாடகங்களை மக்கள் புரிந்து செயற்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம் மக்களே வாழ்ந்து வருகின்றனர். ஏனைய மூன்றில் இரண்டு பகுதி முஸ்லிம்கள் கிழக்கிற்கு வெளியே ஏனைய சமூகங்களுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதனை இவ்வாறான கருகிய அரசியல் இலபாம் தேடும் அரசியல் தலைமைகள் புரிந்து செயற்பட வேண்டும்.

இன்று சாய்ந்துமருது பிரதேசம் தனியான உள்ளுராட்சிமன்றக் கோரிக்கையை விடுத்து நிற்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் எந்தவொரு சமூகமும் எந்த ஒரு பிரதேசமும் பாதிக்காதவாறு அதனை வழங்குவதற்கு என்னாலான நடவடிக்கைய மேற்கொள்வேன்' என்றார்.






You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Tuesday, 25 March 2014 07:06 AM

    தேசிய காங்கிரஸ் வெற்றியுடன் வாழ்க, அதன் சேவை நாடெங்கும் பெருகுக‌...

    Reply : 0       0

    rikas Tuesday, 25 March 2014 11:23 AM

    கழுதை கெட்டா குட்டி சுவர்

    Reply : 0       0

    M.A.A.Rasheed Tuesday, 25 March 2014 01:53 PM

    முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரியும் எல்லோரும் கூறும் கதை இதுதான். ஏணியை எட்டி உதைப்பது இவர்களது வழமையான வேலை. ஆனால் காலம் இவர்களுக்கு பதில் சொல்லும். ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி, பிறகு நீ யார்...?

    Reply : 0       0

    M.S. Anwar Tuesday, 25 March 2014 08:03 PM

    பாலைவனத்தில் வந்த குதிரைமேல் ஏறிவிட்டது.... என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X