2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்வித்துறையில் நிகழும் புதிய மாற்றங்களுக்கு அமைய மாணவர்களை தயார்படுத்த வேண்டும்

Super User   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.கார்த்திகேசு

தமிழர்களின் இருப்பையும் அடையாளத்தையும் கிழக்கு மாகாணத்தில் இல்லாமல் செய்ய வேண்டும். என்பதில் பலர் முனைப்புடன் உள்ளனர். இதற்கு கிழக்கு மாகாணசபையினால் அண்மையில் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ உதவியாளர் நியமனங்களின் போது தமிழர்களை புறக்கணித்தமை சிறந்த சான்றாகும். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

பெரியநீலாவனை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த பெறுபேறுகளைப் பொற்ற மாணவர்களைப் பாராட்டி பணப்பரிசு வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (07)இடம்பொற்றது இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் சமூகத்தின் கண்களாக அறிவாலயங்களும் இறை இல்லங்களும் இருக்கின்றன. இந்த இரண்டு இடங்களும் சிறப்புற வேண்டுமாயின் அந்த நிறுவனத்தை நிர்வகிப்போரால் மட்டும் தனித்து நின்று கருமமாற்றுவது கடினம். இதற்கு சமூகத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

பெரியநீலாவனை விஸ்ணுமகாவித்தியாலம் பெண் தலைமைத்துவத்தின் சிறந்த நிர்வாகத்துடன் இயங்கும் பாடசாலை, அர்பணிப்பு மிக்க ஆசிரிய வளத்தைக் கொண்ட பாடசாலை என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.மாணவர்களான லோ.மதுசன் 9ஏ, பா.மிதுர்சன் 8ஏ, 1சீ, க.கனுஷ்கா 6ஏ, 2பி, 1சீ பெறுபேற்றை பெற்றுள்ளதுடன் அதிகளவான மாணவர்கள் உயர் தரம் கற்கும் தகைமையை பெற்றுள்ளனர்.

மாகாண சபை தேர்தலில் 1287 வாக்குகளை எனக்கு வழங்கிய தமிழ் உணர்வாளர்கள் பெரியநீலாவனை மக்கள். இம் மக்கள் எனக்கு வழங்கிய ஆணைக்கு அடி பணிந்து என்னால் முடிந்த உதவியையும் சேவையையும் ஆற்றுவேன். எமது சமூகத்தில் உள்ள ஒரு சிலருக்கு தொழில் பாடசாலைகளைப் பற்றியும் அதன் நிர்வாகத்தைப் பற்றியும் வீதியில் இருந்து விமர்சிப்பதாகும். ஆனால் இவர்கள் பாடசாலைகள் சாதனைகளை படைக்கும் போது ஓடி வந்து பாராட்டாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்க விரும்புகின்றேன்.

மண்ணின் காவலர்கள் மாணவர்கள் என்பதை உணர்ந்து கொண்டு இவர்களுக்கான கல்வி வாய்ப்பையும் வளமான ஆலோசனைகளையும் அளிக்க வேண்டியது யாவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.

கல்வித்துறையில் நாளுக்கு நாள் புதிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் புதிய சவால்களை வெற்றி கொள்ளும் வகையிலும் நாம் மாணவச் செல்வங்களை தயார் படுத்த வேண்டும். குறிப்பாக ஆங்கில மொழியில் எமது மாணவர்களை பலமடைய வைக்க வேண்டும். இப் பாடசாலையில் மாணவர்கள் ஆங்கில மொழியில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளமை மகிழ்ச்சியாகவுள்ளது.

எனவே, கல்வி இல்லையேல் எமது இருப்பு இல்லை என்ற நிலையில் தமிழர்கள் உள்ளதை உணர்ந்து  யாவரும் கருமமாற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .