2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நமக்காக நாமே பயிரிடுவோம்: அதிசயராஜ்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆரோக்கியமானதொரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காகவே – திவிநெகும வேலைத் திட்டத்தின் மூலம் காய்கறி மற்றும் பழ வகை மரக்கன்றுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. ரசாயனப் பதார்த்தங்கள் தெளிக்காமல் நமக்கான காய்கறிகளை நமது வீட்டுத் தோட்டத்தில் உற்பத்தி செய்து, அவற்றினை நாம் நுகரும்போது – உணவுகள் மூலம் நச்சுப் பதார்த்தங்களை நுகர்வதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது. இதேவேளை, மேலதிக மரக்கறி உற்பத்திகளின் மூலம் வருமானத்தினையும் தேடிக்கொள்ள முடியும் என்று அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எல்.அதிசயராஜ் தெரிவித்தார். 
 
தேசிய எழுச்சி (திவிநெகும) வேலைத் திட்டத்தின் 06 ஆம் கட்டம் - இன்று நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
 
இதற்கிணங்க, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலும் மேற்படி வேலைத் திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கை - திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எப். நவாஸ் தலைமையில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வில், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எல்.அதியராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மரக் கன்றுகளை வழங்கி வைத்துவிட்டு, உரையாற்றுகையிலேயே – மேற்கண்டவாறு கூறினார். 
 
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
 
மரக்கன்றுகளை இவ்வாறு அரசாங்கம் இலவசமாகத் தருவதால், அவற்றின் பெறுமதியை நம்மில் அதிகமானோர் உணர்வதில்லை. நமக்கான உணவினை நாமே உற்பத்தி செய்வதோடு, நச்சுப் பதார்த்தங்கள் அற்ற உணவாகவும் அவற்றினை உற்பத்தி செய்ய முடியும். இதனைக் கருத்திற்கோண்டே – திவிநெகும வேலைத் திட்டத்தின் மூலமாக அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு மரக்கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. 
 
எனவே, இந்தத் திட்டத்தின் இலக்கு என்ன என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கிணங்க பயனாளிகள் செயற்படுவார்களாயின், அது – பயனாளிகளுக்கும் நாட்டுக்கும் நன்மையினைத் தரும் என்றார். 
 
இதன்போது, உதவிப் பிரதேச செயலாளர் அதிசயராஜ் - மரக்கன்று ஒன்றினை பயனாளி ஒருவரின் காணியில் சம்பிரதாயபூர்வமாக நட்டார்.  
 
இந் நிகழ்வில், திவிநெகும வங்கி முகாமையாளர் எஸ். கமலேஷ்வரன், கிராம நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எல். சமட், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். சம்சுல் பர்ஜானா, ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் என். சம்சுதீன் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .