2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருக்கோவிலில் கடல் அரிப்பு; கடற்கரையோரத்தை பாதுகாக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாண்டியடிப் பிரதேசம் தொடக்கம் தம்பட்டைப் பிரதேசம்வரை சுமார் 20 கிலோமீற்றர் தூரம் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றது.

கடல் அரிப்பினால்; கடல் வளங்களும் தென்னை மரங்களும் பாதிக்கப்படுகின்றன. அத்துடன்,  மீன்பிடி வள்ளங்கள் நிறுத்துவதற்கான இடமும்  பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமும் இல்லாமல் போகும் சந்தர்ப்பமும் உள்ளது. எனவே, சிறந்த கடற்கரையோர சூழலை பாதுக்காப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பிரதேசத்திலுள்ள சமூக அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்தக் கடல் அரிப்பு பிரச்சினை தொடர்பில் அம்பாறை மாவட்ட கடல் சூழல் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் கே.சிவகுமாரிடம் நேற்று புதன்கிழமை கேட்டபோது, 'திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள கடல் அரிப்புப் பிரச்சினை தொடர்பில் உரிய  அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரளவுக்கேனும் கடல் அரிப்பை தடுக்கும் நோக்கில் தம்பிலுவில் சிவன்கோவில் பகுதியில்  சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு சவுக்கு மரங்கள் நடப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.

விநாயகபுரம் -03 கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட கடற்கரையோரத்தில் கடல் அரிப்பை  தடுக்கும் நோக்கில் அம்பாறை மாவட்ட வனபரிபாலனத் திணைக்களமும் சவுக்கு மரங்கள் நடப்பட்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தங்களின் தேவைகளுக்காக பொதுமக்கள் மணல் அகழ்வை மேற்கொண்டுள்ளனர். இதனாலும் கடல் அலை உட்புகுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது இங்கு மணல் அகழ்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடல் அரிப்பை பூரணமாக கட்டுப்படுத்த வேண்டுமாயின்,  கடற்கரையோரத்தில் கருங்கல் வேலிகள் அமைக்கப்பட வேண்டும். இதற்கு அதிக நிதி தேவைப்படுவதாகவும் இது தொடர்பில்  எதிர்காலத்தில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .