2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அதிபர் இன்றி அல்லலுறும் பாடசாலை

வி.சுகிர்தகுமார்   / 2018 மே 07 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிபர் இன்றி, கடந்த மூன்று மாதங்களாகக் கல்வி நடவடிக்கைகளைத் தொடரும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசியப் பாடசாலையின் நிலை தொடர்பில், பாடசாலை அபிவிருத்திக் குழு, பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கவலையடைந்துள்ளனர்.
இதனால், பாடசாலையின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதெனவும், விரைவில் இதற்கான தீர்வு வழங்கப்படாவிடின், பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர், இவ்வாண்டு பெப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். இந்நிலையில், பொருத்தமான ஓர் அதிபரை நியமிக்குமாறு, பாடசாலை அபிவிருத்திக்குழு உள்ளிட்ட பொது அமைப்புகள், பல்வேறு தரப்பினரிடத்திலும் கோரிக்கை முன்வைத்தனர்.
“அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஊடாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதகிருஷ்ணனிடமும், அதிபரை நியமிக்குமாறு கடிதத்தைக் கையளித்ததுடன், பொருத்தமான ஒருவரின் பெயரையும் சிபாரிசு செய்தும் கொடுத்துள்ளனர். ஆனாலும், அதற்கான உரிய தீர்வு இதுவரையில் வழங்கப்படவில்லை” என, பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்காலிமாக பாடசாலையைப் பொறுப்பேற்ற பிரதி அதிபர்கள், முடிந்தவரையில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் அவர்களால் சகல நடவடிக்கைகளையும் முன்கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டே, பொது மக்களும் பொது அமைப்புகளும் இணைந்து உரிய தீர்வை பெற்றுக் கொடுக்ககோரி, விரைவில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .