2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அறுவடைக்குத் தயாராகவிருந்த வயல்கள் அறக்கொட்டிக்கு இரை

Princiya Dixci   / 2021 ஜனவரி 18 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

 அறுவடைக்குத் தயாராகவிருந்த பல ஏக்கர் வயல்கள் அறக்கொட்டிப் பூச்சிக்கு இரையாகி வருவதால் அம்பாறை மாவட்ட விவசாயிகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 63,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் மற்றும் தனியார் கடன்களின் மூலம் விவசாய செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், மேற்படி அறக்கொட்டி தாக்கம் காரணமாகவும் யானைகளால் விளைவிக்கப்படும் சேதம் காரணமாகவும், தமது வாழ்வாதார நிலை கேள்விக்குறியாகி வருவதாகக் கூறுகின்றனர்.

யானைத் தொல்லையிலிருந்து விவசாயிகளை அரசாங்கம்  காப்பாற்ற வேண்டும் எனவும் அறக்கொட்டித் தாக்கத்தால் வயல் நிலங்களைக் கைவிட்டு வெளியேறியுள்ள விவசாயிகளுக்கு தகுந்த நட்டஈட்டை வழங்கி கைதூக்கி விடவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். 

இதேவேளை, கடந்த சில நாட்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வயல்கள் மூழ்கியுள்ள நிலையில் அறக்கொட்டி தாக்கம் ஏற்பட்டதால் வேளாண்மை அழுகிய நிலைக்குச் செல்வதையும் அருகிலுள்ள வயல்களை அறக்கொட்டி பூச்சி தாக்கும் நிலை உருவாகி வருவதையும் இங்கு அவதானிக்க முடிகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிக்குப் பொறுப்பான நெற்பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஐ.ஏ.பெரோஸ்,  விவசாயத் திணைக்களத்தின் அறிவுரைகளை செவிமடுக்காமல், குறித்த காலப்பகுதிக்கு முன்னர் விவசாய செய்கையை விவசாயிகள் மேற்கொண்ட காரணத்தாலேயே அறக்கொட்டித் தாக்கம் சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அளவுக்கதிகமான உரப்பாவனை காரணமாகவும் இந்நிலை உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

அறக்கொட்டித்தாக்கம் காணப்படும் பட்சத்தில் முதற்கட்டமாக விவசாய திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட யாவா அல்லது அப்லோட் பூச்சி நாசினியை விவசாயிகள் பயன்படுத்துமாறும் முதிர்பூச்சிகள் காணப்படின் செஸ்ட அல்லது அக்டரா போன்ற பூச்சி நாசினியை பயன்படுத்துமாறும் இதனையும் தாண்டி தாக்கம் அதிகமாக காணப்படின் மாசல் அல்லது விபிஎம்சி பூச்சி நாசினியை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X