2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கரும்புக் காணிகளில் நெற்செய்கைக்கு அனுமதி

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் கரும்புக் காணிகளில் எதிர்வரும் பெரும்போகத்தில் நெற்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

கரும்புக் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைக்கு அமைய, அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் துசித பி. வணிகசிங்க தலைமையில் ஹிங்குராண சீனி உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் கரும்புச் செய்கையாளர்களுக்குமிடையில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற பேச்சுவார்த்தையடுத்து, எதிர்வரும் பெரும்போகத்தில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான அனுமதியை, மாவட்ட செயலாளர் துசித பி. வணிகசிங்க வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் கரும்புச் செய்கை காணிகளில் கரும்புச் செய்கையை மேற்கொள்ள வேண்டுமென மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளதாகவும், அவர் கூறினார்.

கரும்புச் செய்கையை மேற்கொள்வதால் கரும்புச் செய்கைக் காணிகளை காப்புறுதி செய்து மிகவும் தரமான நாற்றுகளை வழங்க வேண்டுமெனவும் மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 4,400 குடும்பங்களுக்கு 5,200 ஹெக்டயர் காணி சீனிக் கூட்டுத் தாபனத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இக்காணிகளில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக விவசாயிகள் நெல் செய்கையை முன்னெடுத்து வந்தனர்.

நாட்டில் சீனி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனும் நோக்கில் 2011ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கை திணிக்கப்பட்டது.

நெல் செய்கை பண்ணப்பட்டு வந்த காணிகளில் பொலிஸாரின் பாதுகாப்போடு, பயிர்கள் அழிக்கப்பட்டதுடன், அதிகாரிகளும் விவசாயிகளை வற்புறுத்தினர்.

குறித்த காணிகளில் கரும்புச் செய்கை பண்ணாது விட்டால், அக்காணிகளை வேறு நபர்களுக்கு உரிமம் மாற்றிக் கொடுப்பதாகவும் அவர்கள் அச்சுறுத்தினர். வேறு வழிகளின்றி நெல் செய்கை பண்ணிய விவசாயிகள், கரும்புச் செய்கையில் ஈடுபட்டனர்.

2014ஆம் ஆண்டு வரை கரும்புச் செய்கையிலீடுபட்ட விவசாயிகளில் 60 சதவீதமானவர்கள் ஓரளவு இலாபமடைந்தனர். 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் கரும்புச் செய்கையில் ஈடுபட்ட 70 சதவீததுக்கும் அதிகமானவர்கள், தொழில் நட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தனர்.

ஆகையால், கரும்புச் செய்கையி கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படும் சுமார் 3,000 ஏக்கர் காணிகளில் எதிர்வரும் 2017/2018 பெரும்போகத்தில் கரும்புச் செய்கைக்கு அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே, இதற்கான அனுமதியை, மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வணிகசிங்க வழங்கியுள்ளதாக, இணைத்தலைவர் ஐ.எம்.மன்சூர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .