2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'சுதந்திரக் கட்சியை அசைக்க முடியாது': இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி நம்பிக்கை

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பது என்ன, அசைத்துப் பார்ப்பதுகூட எவராலும் முடியாத காரியமாகுமென்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்கிரம தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காரைதீவு அலுவலகத்தை சம்பிரதாயபூர்வமாக நேற்று(15) திறந்து வைத்து உரையாற்றியபோதே, இவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் மிகப் பெரிய கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது கட்சி மகத்தான வெற்றியை ஈட்டியது.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர், அமைச்சர் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்தான். அதற்காக அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டுவிலகவேயில்லை.

“யார் வெளியில் போனால்கூட இக்கட்சியில் இருப்பவர்கள் தொடர்ந்தும் இருப்பார்கள். அரசியல் என்பது இதுதான். கட்சி என்பதும் இதுதான். ஒருவர் விட்டு போகின்றபோது, அந்த இடத்தை நிரப்புவதற்கு இன்னும் அநேகர் இருக்கின்றனர்.

“நாம் இக்கட்சியுடனும், இக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் ஒன்றித்து நிற்கிறோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எந்தவொரு தனி இனத்துக்கும் சொந்தமான கட்சி அல்ல. இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களுக்கும் சேவை செய்கின்ற கட்சியாகும்.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, காரைதீவில் அலுவலகம் திறந்து வைக்கப்படுகின்ற இவ்வைபவம் ஒரு மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

“கடந்த உள்ளூராட்சி தேர்தலில் காரைதீவு பிரதேச சபையில் எமது கட்சி இரு ஆசனங்களை வெற்றி பெற்றது. அத்துடன், எமது கட்சியைச் சேர்ந்தவரே, இப்பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக நியமனம் பெற்றுள்ளார்.

“இந்நிலையில்தான், எமது கட்சிக்கான காரைதீவு மக்களின் பேராதரவை வளர்த்தெடுப்பதுடன், அவர்களுக்கான எமது மக்கள் சேவைகளை வழங்குவதற்காகவுமாகவே, நாம் இவ்வலுவலகத்தைத் திறந்துள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .