2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திண்மக்கழிவகற்றலுக்கு வருடம் ரூ.55 மில். செலவு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில், திண்மக்கழிவகற்றல் சேவைக்காக கடந்த வருடம் 55 மில்லியன் ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாக, மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

அதேவேளை, அடுத்த வாரம் தொடக்கம் வகைப்படுத்தப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் கல்முனை மாநகர சபையால் பொறுப்பேற்க மாட்டாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, கொத்தணி முறையிலான திண்மக் கழிவகற்றல் விசேட செயற்றிட்டம், அப்பிரதேசம் முழுவதும் இன்று (04)  முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, ஆணையாளர் மேற்படித் தகவல்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கல்முனை மாநகர சபையால் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகளுள் திண்மைக் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கே அதிகூடிய பணம் செலவு செய்யப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு மாத்திரம் எமது மாநகர சபையின் 55 மில்லியன் ரூபாய் நிதி திண்மைக் கழிவகற்றல் சேவைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

“இவ்வாறு பாரிய நிதியைச் செலவிட்டு கல்முனை மாநகர சபை திண்மக் கழிவகற்றல் சேவையை மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு போதாமையாகவே இருந்து வருகின்றது.

“குப்பைகளை வகைப்படுத்தாமல் கையளிப்பதும் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை வீசுவதும் எமக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது. பொதுவாக கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளில் 90 சதவீதமானவை எம்மால் சேகரித்து அகற்றப்படுகின்றன.

“உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கண்டிப்பான பணிப்புரையின் பிரகாரம், கடந்த ஜூன் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் நாடு முழுவதும் வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் மாத்திரமே உள்ளூராட்சிமன்றங்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

“பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் இத்திட்டம் வெற்றியளித்துள்ளன.

“அதுபோன்று கல்முனையிலும் நடைமுறைக்கு வந்துள்ள இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு இப்பகுதி வாழ் பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

“அந்தவகையில், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அடுத்த வாரம் தொடக்கம் வகைப்படுத்தப்படாத குப்பைகள், எக்காரணம் கொண்டும் கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் வாகனங்கள் பொறுப்பேற்க மாட்டாது என்பதை கண்டிப்பாக அறியத்தருகின்றேன்.

அதேவேளை, பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பைகளைப் போடுவோருக்கு எதிராக, பொலிஸார் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X