2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேர்தல் ஆணைக்குழுவின்அறிவுறுத்தலுக்கு முரணாக அதிபர் நியமனம்

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஜனவரி 03 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்ட பின்னர், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சு, பாடசாலையொன்றுக்கு, அதிபர் ஒருவரைத் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு முரணான முறையில் நியமனம் செய்துள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளருக்கு முறையிடப்பட்டுள்ளது.

சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான அதிபர் நியமனமே, இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு முரணாக இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

மேற்படி முறைப்பாட்டை, கிழக்கு மாகாண நல்லாட்சிக்கும் அபிவிருத்தி மற்றும் கல்விக்கான மன்றத்தின் சம்மாந்துறைக் கிளை, தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்ததாக, மன்றத் தவிசாளர் எம்.எம்.அஹமட் தெரிவித்தார்.

மாகாணக் கணக்காய்வு அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசாரணையொன்று இடம்பெற்ற போது, சம்பந்தப்பட்ட அதிபருக்கெதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு, மேற்படி பாடசாலை அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வு விசாரணையின் போது, குற்றம் சுமத்தப்பட்ட ஓர் அரசாங்க உத்தியோகத்தருக்கு, முறைசார் விசாரணைக்கான தாபனக்கோவை ஏற்பாடுகளுக்கமைய குற்றப்பத்திரம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், இவ்வதிபருக்கு குற்றப்பத்திரம் வழங்கப்படாமல் குற்றம் மறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி அதிபருக்கெதிரான விசாரணை அடிப்படையில் அவர் இடமாற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்து, சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.கே.எம்.றிஸ்வி என்பவர், கல்முனை மேல் நீதிமன்றத்தில் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சு, வலயக்கல்விப் பணிப்பாளர்
ஆகியோருக்கெதிராக வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

இவை எதனையும் கவனத்திற்கொள்ளாத நிலையில், 1 ஏபி தரப்பாடசாலையான மேற்படி பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுபவர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே, முறைகேடான முறையில் நியமனம் செய்யப்பட்டமை, அரசியல் அழுத்தமெனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .