2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் ஆணையைப் பெற்று, உள்ளூராட்சி சபைக்கு வந்துள்ள உறுப்பினர்கள், தேர்தல் மேடைகளில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுதற்கு முன்வர வேண்டுமென, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா கேட்டுக்கொண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் பின்னர் இடம்பெறும் முதலாவது அமர்வு, தவிசாளர் தலைமையில் இன்று (10) நடைபெற்றது.

இந்த அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“பல கிராமங்களைக் கொண்டடைந்த அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகங்கள் மிக நீண்டகாலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களின் இன நல்லுறவுக்காகவும், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் புதிதாக அமையப் பெற்றுள்ள இச்சபை கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும். 

“இப்பிரதேச சபை, நாட்டின் அனைத்து மக்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் முன்மாதரியாகத் திகழ வேண்டும். 

“பிரதேச மட்டத்தில் மக்கள் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவ்வாறான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி, உடனுக்குடன் தீர்வு வழங்குவதற்கு அரசியல் பிரதிநிதிகளுக்கு, அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

“எமக்குக் கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தும் போதே மக்கள் எம்மை மதித்து நடப்பதுடன், எதிர்காலத்திலும் நம்பிக்கை வைத்து நமக்கான ஆணையை வழங்குவார்கள். 

“இந்தப் பிரதேச சபையை மக்கள் சபையாகவே நான் கருதுகின்றேன். மக்களின் நலனுக்காகவும், பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவும் எந்த நேரமும், எச்சந்தர்ப்பத்திலும் இச்சபை மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .