2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’ரேப் என்றால் என்ன?”

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொள்ளாச்சி சம்பவம் பற்றி அடிக்கடி பேச நேர்ந்ததில் ஒரு புதிய சொல்லிற்கு அர்த்தம் கேட்டான் பத்ரி. அவன் கேட்டது ஒற்றைச் சொல்தான். பொருள்கோடக் கடினமான சொல். பத்து வயதுக் குழந்தைக்குப் பொருள்கோடுவது இன்னும் கடினம்.

அவன் கேட்டது இதுதான்.

”ரேப் என்றால் என்ன?”

ரொம்பவே சாதாரணமாகக் கேட்டுவிட்டான். ”ச்சீ இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத கேள்வி, அந்தப் பக்கம் போ” என்று அவனை விரட்டி விட்டிருக்கலாம். அல்லது ”இன்னொரு தடவை இந்த மாதிரி ஏதாவது கேட்டே வாயிலேயே சூடு வச்சிருவேன் பாரு” என்று எச்சரித்திருக்கலாம். இவற்றினாலெல்லாம் தற்காலிகமாக நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

குழந்தைகளின் மனது புதிரானது. திருப்தியான புத்தி ஏற்றுக் கொள்ளத்தக்க பதில் கிடைக்கின்ற வரைக்கும் அவர்கள் கேள்வி கேட்பதிலிருந்து பின்வாங்குவதில்லை. அம்மாவிடம் திட்டு வாங்கியதைப் பொருட்படுத்தாமல் அதே கேள்வியை அப்பாவிடம் கேட்பார்கள். அம்மா அப்பா இருவரிடமும் திட்டு வாங்கியதைக் கண்டுகொள்ளாமலேயே தாத்தா பாட்டியிடம் கேட்பார்கள். அவர்களின் தேடல் எல்லையற்று விரியக்கூடியது.

இன்றைய காலக் குழந்தைகளுக்குத் தேடுவதற்குப் பல களங்களை நாமே கைகளில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். ஸ்மார்ட் போன்களோடும், டெப்லட், கணினிகளோடும் குழந்தைகள் விளையாடும் காலமிது. இவர்களிடம் பாட்டி வடை சுட்ட கதைகள் எடுபடுவதில்லை. இத்தகு தொழில்நுட்ப யுகத்தில் குழந்தைகளை வளர்ப்பதென்பது வெறுமனே சோறூட்டி படுக்கவைப்பதோ பள்ளிக்கு அனுப்புவதோ மட்டுமில்லை. அவர்களின் சிந்தனையோட்டங்களை, மனத்தின் போக்குகளை, தேடல்களை தேடல்களுக்கான காரணங்களை எல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்புள்ள இடத்தில் இருக்கிறோம்.

ஆக, ”ரேப் என்றால் என்ன?” என்ற எனது மகனின் கேள்வியை அலட்சியமாகக் கடக்க முடியாது. ஆனால் எப்படியாக அவனுக்குத் தகுந்த விதமாக இதனை விளக்குவதென்பதில்தான் சாதுரியம் இருக்கிறது.

பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நல்ல தொடுகை எது, கெட்ட தொடுகை எது என்று சொல்லிக் கொடுக்க முடிந்த நம்மால், ”டோன் டச்” என்று ஏன் ஆண் குழந்தைகளுக்குச் சொல்லக் கூடாது என்று தோன்றியது. அதுதானே சரியானதும்கூட. காலங்காலமாக பாதிக்கப்படுகின்றவர்களிடமே எப்படிப் பாதிக்கப்படாதிருப்பது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறோமே தவிர, அவர்கள் பாதிப்பிற்குக் காரணமாக இருக்கின்றவர்களிடம் ஏன் விரல் நீட்டத் தயங்குகிறோம்?

ஒவ்வொரு முறையும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் நடக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சுமத்துகிறோம். பாலியல் வன்புணர்வைச் செய்த நபர்களின் மீது உளப்பாதிப்பு, பெற்றாரின் புறக்கணிப்பு என்று ஏதாவது காரணிகளைத் தேடிப்பிடித்து அனுதாபம் காட்ட முற்படுகிறோம். இது பாலியல் வன்முறைகளுக்கு ஒட்டு மொத்த சமுதாயமுமே துணை போவதைப் போலத்தான். பாலியல் வன்முறையைச் செய்தவரைத் தண்டிப்பதற்குப் பதிலாக அனுதாபவங்களைக் கிளறி சிறிய தவறாகக் காண்பிக்கச் செய்யும் முயற்சிகளால் குற்றவாளிகளைத் தப்பிக் செய்வது மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் குற்றங்கள் நடைபெறவும் துணை போகின்றோம்.

பெண்ணின் உடல் பற்றிய உக்கிப் போன சிந்தனைகளையே சந்ததி சந்ததியாகக் கடத்துவதில் வெற்றி கண்ட ஒரு சமூகம் நாம். இதனால் நாம் அடைந்தது என்ன என்றால் ஒன்றுமில்லை. பெண்களை மேலும் மேலும் நத்தை ஓட்டுக்குள் சுருட்டிக் கொள்வதுபோல சுருண்டிருக்கச் சொல்லித் தந்து தலைகுனிந்து நிற்க வேண்டிய குற்றவாளிகள் நாம்.

பெண் பிள்ளைகளை அல்ல, ஆண் பிள்ளைகளைப் பொறுப்புடன் வளர்க்க வேண்டிய தேவைத்தான் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல பாலியல் வன்புணர்வுச் செய்திகள் அறைகூவுகின்றன.

இனி, நம் பிள்ளைகளுக்கு மறைக்க ஒன்றுமில்லை. ”ரேப்” என்பது இல்லாத கற்பை அழிப்பது என்ற போலிக் கற்பிதம் இனியும் வேண்டாம். ஒரு பெண்ணின் உடலை அத்துமீறுவது, துன்புறுத்துவது வேதனை செய்வது எதுவும் கூடாது, இவை தண்டனைக்குரிய குற்றங்கள் மட்டுமல்ல மனித குல அடிப்படை அறங்களை மீறும் கொடுஞ் செயல் என்று மகனுக்குப் பதில் சொல்லியிருக்கிறேன். அவன் வயதுக்கு இந்தப் பதில் போதும். இனி அவன் தேடல் இதிலிருந்துதான்…


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .