2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அரசியல் ஆயுதமாகும் ‘தண்டனைக் கைவிலங்கு’

Editorial   / 2021 ஜனவரி 10 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே சட்டத்தில் அரசியல் ஆயுதமாகும் ‘தண்டனைக் கைவிலங்கு’

எல்லோருக்கும் பொதுவான ஒரு விடயத்தில், தணிக்கை தலையிடுவதை எக்காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஒவ்வொன்றுக்கும் ஏதோவோர் அர்த்தம் இருப்பது திண்ணம். ஆனால், பொதுமன்னிப்பு அர்த்தமில்லாத ஏதொவொன்றுக்குள் விழுந்துவிட்டதாகவே அண்மைக்கால ‘விடுவிப்புகள்’ எடுத்தியம்புகின்றன.

‘ஒரே நாடு- ஒ​ரே சட்டம்’ என உதடுகளால் முணுமுணுக்கப்பட்டாலும், பொதுமன்னிப்பு மட்டும் தனியொரு குழுவைத் திருப்திப்படுத்தவோ, அன்றேல் மற்றுமொரு தரப்பினரை அதிருப்தியுறச் செய்து, விரக்தியின் எல்லைக்கே இழுத்துச் செல்லும் வகையிலேயே ‘பொதுமன்னிப்பு’கள் அமைந்துள்ளன.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு, பல தருணங்களில் ‘அரசியல் ஆயுதம்’ ஆகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றால் தவறில்லை. 1978ஆம் ஆண்டு, அரசியலமைப்புக்குப் பின்னர், இன்றைய நாள்வரையிலான மன்னிப்புகளைப் பார்க்கும்போது, அவை தெட்டத்தெளிவாகத் தெரிக்கின்றன.

எவ்விதமான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்காது, நீதிமன்றங்களில் நிறுத்தப்படாமல் ஒரு தசாப்தத்துக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தங்களை, பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தும் தமிழ் அரசியல் ​கைதிகளின் அவலக்குரல், ஆட்சியாளர்களின் காதுகளுக்குக் கேட்காமை வெட்கித் தலைகுனியச் செய்கிறது.

ஆனால், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் கைவிலங்குகள் அவ்வப்போது அவிழ்க்கப்படுகின்றன. இது அபத்தமானது; அநீதியானது. 1978க்கு முன்னர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு இருக்கவில்லை. இராணியின் மன்னிப்பும், அதற்குப் பின்னர் ஆளுநரின் மன்னிப்பும் இருந்தன.

டொனமூர், சோல்பரி அரசியலமைப்புகளின் பிரகாரம், ஆளுநருக்குப் பொதுமன்னிப்பு வழங்க முடியும். ஆனால், வழக்குகளை முறையாக விசாரணைக்கு உட்படுத்தி, நீதிமன்றங்களின் ஊடாகத் தண்டனை விதிக்கப்பட்ட எவரும், பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவில்லை.

முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவைப் படுகொலை செய்த சோமாராம ​தேரருக்கு, பொதுமன்னிப்பளிக்க வேண்டுமெனக் கோரப்பட்டது. எனினும், மன்னிப்பு வழங்கப்படவில்லை.

ஆனால், 1978ஆம் அரசியல் அமைப்பின் ஊடாக, பொதுமன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டது. ‘ஜனாதிபதியின் பொது மன்னிப்பு’, இந்நாட்டில், மிகத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட, தவறாகப் பயன்படுத்தப்படும் அதிகாரங்களில் ஒன்றாக இருக்கிறது.

தமிழர்களைக் கொன்றொழித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றிருந்த, முன்னாள் இராணுவத்தினருக்கு ஒரேநாடு- ஒரே சட்டத்தின் கீழ், பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.  பொது மன்னிப்புக்கான அளவு​கோல்களுக்கு ​வரையறை இன்மையால், மேன்முறையீடுகளுக்கு அப்பாற்சென்று, பொதுமன்னிப்புகள் வழங்கப்படுகின்றன.

‘ஒரேநாடு- ஒரே சட்டம்’ என்பது உண்மையாயின் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். இவ்விடயத்திலாவது சிறுபான்மை இ​னங்களைச் சேர்ந்த அரசியல், சமூக, மதத் தலைவர்கள் ஓரணியில் திரளவேண்டும். பூனைக்கு மணிக்கட்டுவது யார்? என்ற கேள்வியின்றி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் ஓரணியில் திரளவேண்டுமென வலியுறுத்துகின்​றோம்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X