2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மடமையைக் கொளுத்தி, விழிப்புணர்வு பெறச் செய்வோம்

Editorial   / 2021 ஜனவரி 18 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடமையைக் கொளுத்தி, விழிப்புணர்வு பெறச் செய்வோம்

முயற்சிகள் செய்யாத வரையில், இயலாமை எனும் பூதம், தடுத்தாற்கொண்டே இருக்கும். அதைத் தூரவிட்டெறிந்து, வீறுகொண்டெழுந்தால் எல்லாமே சுபீட்சமாகும். என்னால் இயலாது, முடியாது, நான் தோற்றுவிடுவேன் என, எதிர்மறையாகச் சிந்திப்பதை விடவும், முயற்சிசெய்ய முன்வருபவ​ர்களிடத்தில், முன்னேற்றத்துக்கான மாற்றங்கள் எற்படத்தான் செய்கின்றன.  

வாழ்க்கையோட்டத்தில் வெற்றிதோல்விகள் ஏற்படவேண்டும்; தோல்விகளைப் படிப்பினையாக்கி, வெற்றிகளை வழிகாட்டலுக்காக மாற்றிக்கொள்ளவேண்டும். ​தொடர் தோல்விகள், முயலாமைக்கான பரிசு; அதற்காக மனம் ​சோர்ந்துவிடக்கூடாது; முயற்சிகளைக் கைவிடக்கூடாது. 

ஒவ்வொருவருக்கும் ஏ​தோவொரு திறமை இருக்கின்றது. அதை இனங்கண்டு, அதன்பாதையில் பயணித்தால், வெற்றிகள் தொலைவில் இருக்காது. வெளியாகியிருக்கும் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள், சிலருக்குக் குதூகலமாகவும் இன்னும் சிலருக்கு கசப்பாகவும் இருக்கலாம். 

கொரோனா வைரஸ் பரவலின் நெருக்கடி சூழ்நிலைக்கு மத்தியிலும், இத்தனை புள்ளிகளைப் பெற்றுவிட்டேன் என, ஒவ்வொரு மாணவனும் சந்தோசப்பட்டுக் கொள்ளவேண்டும்.  

பரீட்சை ஒருவகையான பயிற்​சியாகும். அதில், ஆகக்கூடுதலான புள்ளிகளைப் பெற்றவர்கள், கடுமையாக முயற்சித்து இருக்கின்றனர். இன்னும் சிலர், விளையாடில் கவனம் செலுத்தி, படிப்பில் கவனத்தைச் சிதறவிட்டிருக்கின்றனர் எனலாம். 

இப்பரீட்சையில், தன்பிள்ளை வெட்டுப்புள்ளியை கடக்கவில்லையெனத் தண்டிக்கக்கூடாது. அடுத்தடுத்த பரீட்சைகளுக்குத் தயார்படுத்த வேண்டும். இதுவே முதலாவதும் இறுதியானதுமான பரீட்சையென நினைத்து, திட்டித் தீர்த்துவிடக்கூடாது. பெற்றோர், ஆசிரியர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். 

கொரோனா வைரஸால் வகுப்பறை கல்விச்செயற்பாடுகள், முழுமையாகவே பாதிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இலத்திரனியல் (சூம்) ஊடாகக் கற்றல் செயற்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. நேரம் காலம் தெரியாமல், கற்பிக்கப்படுகின்றன.  மாணவர்களின் (சிறார்களின்) வயதை அறிந்து, நேரத்தை ஒதுக்கவேண்டும்.

இந்த ‘சூம்’, வழிபாடுகளுக்கு உள்ளும் புகுந்துவிட்டதுதான் வியப்பாக இருக்கிறது. மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லாமலே, வீடுகளில் இருந்தவாறு பலரும் வழிபடுகின்றனர். ஆனால், அலைபேசிகளைக் கைகளில் ஏந்தியவாறு வழிபடும் முறைமை, எந்தளவுக்கு பக்திபூர்வமானது? 

கொரோனா வைரஸ் காலத்தில், ‘ஜிம்’கள் மூடப்பட்டிருக்கின்றன. எனினும், வழிபாட்டுத் தலங்கள் மட்டும் திறந்திருப்பது ஏன்? எனக் கேட்ட ஈரானின் அங்கவீனமுற்ற தடகள வீரரான ரேஸா தப்ரிஸி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு, மரண தண்டனைகூட விதிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.  

கருத்துச் சுதந்திரம் நாட்டுக்கு நாடு வேறுபடும்; அச்சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோரும் இருக்கின்றனர். இங்கு, கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்த சடலங்கள், வீதியில் கிடப்பதாகப் பதிவிட்ட இருவர் கைதாகி உள்ளனர். இவையெல்லாம் அறியாமையின் ​வெளிப்பாடாகும். இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  17.11.2020


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X