2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வேலியே பயிரை மேய்ந்தால், மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் யார்?

Editorial   / 2021 மார்ச் 02 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலியே பயிரை மேய்ந்தால், மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் யார்?

நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்படும் வரையிலும், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட எந்தவொரு நபரும் சந்தேகநபராவார். அந்நபரை வழிநடத்தவேண்டிய முறைமை தொடர்பில், ‘பொலிஸ் நிலையத்தில் கைதாகியிருக்கும் நபர்களின் உரிமைகள்’ எனும் தலைப்பின் கீழ் தெட்டத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், சட்டரீதியான பாதுகாப்பு, சர்வசாதாரணமாக உரித்தாதல் வேண்டும்; உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தல் செய்தல் ஆகாது. கைது செய்யப்படுபவர் பெண்ணாயின், சோதனை செய்யும் போதும், விசாரணைகளை முன்னெடுக்கும் போதும் பெண்ணொருவரின் பொறுப்பின் கீழ் முன்னெடுக்குமாறு கேட்கமுடியும்.

அதற்கு அப்பால், நெருங்கிய உறவினர்களை சந்தித்துக்கொள்வதற்கான, உரிமையும் சந்தேகநபருக்கு உண்டு. அவ்வாறானவர்களைச் சந்திப்பதற்கு, பொலிஸார் அனுமதியளிக்க வேண்டும். சட்டத்தரணியின் உதவியைப் பெற்றுக்கொள்ள இயலுமாயின், அதற்கான ஒத்துழைப்பை நல்கவேண்டும்.

ஆனால், பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவரைப் பார்வையிடுவதற்குச் சென்றிருந்த சட்டக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவன், மிகமோசமான முறையில், பொலிஸ் நிலையத்துக்குள் வைத்தே தாக்கப்பட்டுள்ளமை நாட்டின் ‘சட்ட ஆட்சி’ எந்தளவுக்கு நிற்கிறது என்பதைப் புடம்போட்டுக் காட்டிநிற்கிறது.

ஐ.நா மனித உரிமை பேரவையில், ‘பொறுப்புக்கூறல்’ இலங்கைக்கு மிகமுக்கியமான வலையாக விரிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கன. பொலிஸ் துறைக்குள் சேர்த்துக்கொள்ளும் போது, மனிதாபிமானம், மனித உரிமைகள் உள்ளிட்ட ஏனைய உரிமைகள் தொடர்பில் நன்கு கற்பிக்கப்பட வேண்டும்.

இல்லையேல், சட்டத்தை நிலைநாட்டவேண்டிய பொலிஸாரே, அவற்றை மீறிச் செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாகக் கேட்கவேண்டிய நிலைமைகள் ஏற்படும். அதேபோல, குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த  அதிகாரிகளுக்கு, அதியுயர் தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக, இவ்வாறான மனித உரிமைகள் மீறல்கள், இனிமேலும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்ய முடியும்.

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ நாட்டில் அமுல்படுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியானதன் பின்னர், ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்பதற்கான அர்த்தத்தைத் தேடவேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள், பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், நில அபகரிப்பு, காணி அபகரிப்பு, வழிபாட்டிடங்களைக் கையகப்படுத்தல் ஆகியன அப்பட்டமாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

பொலிஸாரால் தாக்கப்பட்டவர், சட்டக்கல்லூரியின் மாணவன் என்பது மட்டுமல்லாது, ஜனாதிபதி சட்டத்தரணியொருவரின் மகனாவார், அதனால்தான் என்னவோ, இந்த விவகாரத்துக்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சாதாரண நபரொருவர் மீது, இவ்வாறான அராஜகம் காண்பிக்கப்பட்டிருந்தால், சகலதும் மூடிமறைக்கப்பட்டிருக்கும்.

பொலிஸார் மட்டுமன்றி, சாதாரண பொதுமக்களும் பொதுவான சட்டங்கள் தொடர்பில், சாதாரண தெளிவைக் கொண்டிருந்தாலே, இவ்வாறான மனித உரிமை மீறல்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பதே எங்களுடைய அவதானிப்பாகும்.(01.03.2021)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .