2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹர்திக் படேலின் கைதை கண்டிக்கிறார் பிரியங்கா

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹர்திக் படேல், தேசவிரோத வழக்கில் ஆஜராகத் தவறியதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பெயரில் பிணையில் வெளிவர முடியாத பிரிவுப்  பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

ஹர்திக் படேலை கைது செய்தமைக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹர்திக் படேல் கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி  நடந்த பொதுக்கூட்டத்தில் அரசுக்கு எதிராகவும்  சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் அவர் மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹர்திக் படேல் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதில் ஹர்திக் படேல் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஹர்திக் படேல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஹர்திக் படேல் ஆஜராகவில்லை. இதனால், கூடுதல் அமர்வு நீதிபதி பி.ஜி. ஞானேந்திரா ஹர்திக் படேலுக்கு பிணையில் வெளிவராத கைதைப் பிறப்பித்தார்.

இதையடுத்து, பொலிஸார் ஹர்திக் படேலை தீவிரமாகத் தேடியதில் அஹமதாபாத் மாவட்டம், வீரம்கம் வட்டத்தில் இருப்பதைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.

அவரை நீதிமன்றத்தில் இரவோடு இரவாக ஆஜர்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஹர்திக் படேலை பொலிஸார் கைது செய்தமைக்குக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பாஜகவைக் கண்டித்துள்ளார்.

அவர் பதிவிட்ட கருத்தில், " விவசாயிகளின் உரிமைக்காகவும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும் போராடிவரும் ஹர்திக் படேலை பாஜக தொடர்ந்து துன்புறுத்தி, சீண்டி வருகிறது.

அவர் சார்ந்திருக்கும் பட்டிதார் சமூகத்தின் குரலாக ஹர்திக் படேல் இருக்கிறார், அந்த மக்களுக்காக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தாருங்கள் என்று கேட்கிறார்,

மாணவர்களுக்கு உதவித் தொகை கேட்கிறார். விவசாயிகளை ஒன்று திரட்டி இயக்கமாகக் கொண்டு செல்கிறார்.

ஆனால், ஹர்திக் படேல் செய்வதையெல்லாம் பாஜக தேசத் துரோகம் என்று அழைக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .