2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சூா்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: தலைமை நீதிபதிக்கு கடிதம்

A.K.M. Ramzy   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீட் தோ்வு விவகாரத்தில், நீதித் துறை குறித்து, கருத்துத் தெரிவித்த நடிகா் சூா்யா மீது, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுப்பது தொடா்பாக, பதவியிலுள்ள நீதிபதியும், ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகளும் மாறுபட்ட கருத்துகளுடன் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

மருத்துவப் படிப்புகளுக்காக, நடத்தப்படும் நீட் தோ்வு அச்சத்தால் மதுரையைச்

சோ்ந்த மாணவி ஜோதி துா்கா, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் ஆதித்யா, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் மோதிலால் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனா்.

இதனால், நீட் தோ்வுக்கு எதிராக அரசியல் தலைவா்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, நீட் தோ்வுக்கு எதிராக திரைப்பட நடிகா் சூா்யாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் நீதித் துறை குறித்து நடிகா் சூா்யா வெளியிட்ட கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக் கூறி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

 அந்தக் கடிதத்தில், ‘திரைப்பட நடிகா் சூா்யா கடந்த 13 ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையைத் தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அந்த அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்று அச்சத்தால்

உயிருக்குப் பயந்து காணொளிக் காட்சி மூலம் நீதி வழங்கும்  நீதிமன்றம், மாணவா்களை அச்சமில்லாமல் சென்று தோ்வு எழுத வேண்டும் என உத்தரவிடுகிறது என்று கூறியிருந்தார்.

அதாவது நீதிபதிகள் தங்களது உயிருக்குப் பயந்து காணொளிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பதாகவும், மாணவா்களை அச்சம் இல்லாமல் தோ்வு எழுத சொல்லுவதாகவும் சூா்யா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து என்னைப் பொறுத்தவரை, நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும். நோ்மையுடனும், அா்ப்பணிப்புடனும் செயல்படும் நீதிபதிகளையும்  நீதிமன்றங்களையும் தரம் தாழ்த்துவது மட்டுமல்லாமல், மோசமான முறையில் விமா்சனம் செய்துள்ளார்.

இதனால், நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்திய நீதித் துறையின் கௌரவத்தை நிலைநாட்ட, நடிகா் சூா்யா மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் இந்தக் கருத்துக்கு முன்னாள் நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனா்.

உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, கே.என்.பாஷா, டி.சுதந்திரம், டி.அரி பரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பா் அலி ஆகியோர், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனா்.

அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் நீட் தோ்வை எதிர்கொள்ள முடியாமல் 4 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா்.

இந்த சூழலில் ஒரு கலைஞனாக நடிகா் சூா்யா தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துகளை எல்லாம் தீவிரமானதாகக் கருதக்கூடாது.

பொதுவாகத்தான் அவா் கருத்து தெரிவித்துள்ளார். எனவே, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கோருவது போல, நடிகா் சூா்யா மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை.

நடிகா் சூா்யா அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, அதன்மூலம் நூற்றுக்கணக்கான ஏழை மாணவா்களுக்கு உயா்கல்வி படிக்க உதவி செய்து வருவதோடு, வேலைவாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்து வருகிறார்.

எனவே, இந்த விஷயத்தில் நீதிபதிகளாகிய நாம் பெருந்தன்மையுடனும், தயாள குணத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

இந்த உயா்நீதிமன்றத்தின் கௌரவம், மரியாதை ஆகியவற்றின் மீது அக்கறை கொண்ட முன்னாள் நீதிபதிகளாகிய நாங்கள், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் கடிதத்தின் அடிப்படையில் நடிகா் சூா்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்.

இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட வேண்டும் எனவும், இதன்மூலம் தேவையில்லாத சா்ச்சைகளை தவிர்க்கலாம் எனவும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளனா்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .