2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமெரிக்கா, தென்கொரியா மீது தாக்குதல் நடக்குமென வடகொரியா எச்சரிக்கை

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரியத் தீபகற்பத்தில் நவீன தாட் (THAAD) ஏவுகணைப் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கொண்டுவருவதற்கு ஐக்கிய அமெரிக்காவும் தென்கொரியாவும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, பௌதிக எதிர்வினையொன்றை ஆற்ற வேண்டியேற்படும் என, வடகொரியாவின் இராணுவம் எச்சரித்துள்ளது.

தாட் என்றழைக்கப்படும் இந்த நவீன ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தை, வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணை வளர்ச்சிக்கு எதிராகப் பயன்படுத்தவுள்ளதாக, ஐக்கிய அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தன.

இவ்வாண்டு தனது நான்காவது அணுவாயுதச் சோதனையப் பூர்த்திசெய்ததோடு, ஏவுகணைகள் பலவற்றையும் பரிசோதித்துள்ள வடகொரியாவுக்கு எதிராக, தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து வழங்கிய எச்சரிக்கை நடவடிக்கையாக, இது அமைந்திருந்தது.

தாட் பாதுகாப்புத் திட்டத்தை "ஆக்கிரமிப்புக் கருவி" என வர்ணித்த வடகொரியா, தாட் பாதுகாப்புக் கருவி நிலைகொள்ளும் இடமும் நேரமும் அறிந்த உடனேயே, "பௌதிக எதிர்வினை" ஆற்றப்படும் எனத் தெரிவித்தது. வழக்கமாக எச்சரிக்கைகளையே வழங்கும் வடகொரியா, பௌதிக எதிர்வினை என்பதன் மூலம், நேரடியான தாக்குதல் என்பதையே குறிப்பிடுகிறது. தாட் கருவி கொண்டுவரப்பட்டால், தெற்குப் பகுதியை நெருப்பினதும் சாம்பரினதும் கடலாக மாற்றப் போவதாகவும், இராணுவத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.

தாட் ஏவுகணையை கொரியத் தீபகற்பத்தில் நிறுத்தும் அறிவிப்பு, சீனாவினுடைய எதிர்ப்பையும் முன்னர் சம்பாதித்திருந்தது. வடகொரியாவின் மிக நெருக்கமான தோழமை நாடாக, சீனாவே காணப்படும் நிலையில், அதன் எதிர்ப்பும், எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே காணப்பட்டது.

ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னர், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் மீது தடைகளை விதித்து, அமெரிக்கா உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த வடகொரியா, அதை "போர்ப் பிரகடனம்" என வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .