2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அலெப்போவில் குறைந்தது 28பேர் கொல்லப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 17 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரிய நகரமான அலெப்போவில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில், சிறுவர்கள் உட்பட குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டதாக, மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அலெப்போவின் கிழக்கிலுள்ள எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில், சிரிய அல்லது ரஷ்ய விமானங்களாலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அலெப்போவில் சில பகுதிகளில், கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புறநகர்ப் பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றை குண்டுத்தாக்குதல்கள் தாக்கிய நிலையில், அங்கிருந்த சில பணியாளர்களும் நோயாளர்களும் காயமடைந்திருந்தனர்.

இதேவேளை, தம்மால் கட்டுப்படுத்தப்படும் அலெப்போவின் மேற்குப் பகுதிகளில் எதிரணியினரால் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மறுபக்கம், சிரியா முழுவதும் கடுமையான மோதல்கள் தொடருகையில், கரையோர மாகாணமான லடாக்கியாவிலுள்ள பிரதான நகரமொன்றான கின்சப்பாவை சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கு விசுவாசமான படைகள், தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிரியாவில், அல்-நுஸ்ரா முன்னணிக்கெதிராக ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற தமது நாடு இணங்கியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X