2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அலெப்போவிலிருந்து பொதுமக்களும் போராளிகளும் வெளியேற்றம்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 15 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் அலெப்போவில், போராளிகளின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிழக்கு அலெப்போவிலிருந்து, பொதுமக்களையும் போராளிகளையும் வெளியேற்றும் பணிகள், இன்று ஆரம்பித்தன. எனினும், அந்த நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், தாக்குதல்களும் பதற்றங்களும் ஏற்படுவதைத் தடுக்க முடிந்திருக்கவில்லை.

கிழக்கு அலெப்போவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் படைகள், கடந்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அப்படைகள், தொடர்ச்சியாக முன்னேறி வந்தன. கிழக்கு அலெப்போவின் சிறிய பகுதிக்குள் சிக்கியிருந்த பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள், தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து வந்தன. எனினும், புதன்கிழமை இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பேரம்பேசல்களின் விளைவாக, கிழக்கு அலெப்போவில் சிக்கியுள்ள பொதுமக்களையும் போராளிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான இணக்கம் ஏற்பட்டது.

கிழக்கு அலெப்போவின் 1 சதவீதப் பகுதிக்குள் மாத்திரமே போராளிகளின் ஆதிக்கம் காணப்படும் நிலையில், அப்பகுதிக்குள் சுமார் 50,000 பொதுமக்கள் காணப்படுகின்றனர் என, ஐக்கிய நாடுகள் தெரிவிக்கின்றது. அவ்வாறுள்ள மக்களில், சுமார் 15,000 பேரை வெளியேற்றுவதற்கே இணக்கம் ஏற்பட்டது.

கிழக்கு அலெப்போவில் காணப்படும் 15,000 பேரை வெளியேற்றும் அதே நேரத்தில், போராளிகளின் கட்டுப்பாட்டில் காணப்படும் இட்லிப்பின் சில பகுதிகளிலிருந்தும், 15,000 பேர் வெளியேற்றப்பட வேண்டுமென்பதே, அந்த இணக்கத்தின் அடிப்படையாகும்.

எனவே, கிழக்கு அலெப்போவிலுள்ள மக்களை, இட்லிப் மாகாணத்துக்குள்ளும் துருக்கிக்கும் அழைத்துச் செல்வதற்காக, அரசாங்கத்தின் பஸ்கள், நேற்று மதிய நேரத்தில் சென்றன. இட்லிப்பிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்காக, அரசாங்கத்தின் 29 ட்ரக்-களும் அம்பியூலன்ஸ்களும் அனுப்பப்பட்டன.

அதேபோல், காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் என சுமார் 200 பேரை, அம்பியூலன்ஸ்கள் மூலம் கிழக்கு அலெப்போவிலிருந்து வெளியேற்றும் பணிகளை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சிரியக் கிளையும் சிரியாவின் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து மேற்கொண்டன.

இதில், கிழக்கு அலெப்போவிலிருந்து வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கை தொடர்பாகக் குழப்பங்கள் காணப்பட்டன. ரஷ்யத் தரப்பின் தகவல்களை மேற்கோள்காட்டி, 5,000 பேரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, சில ஊடகங்கள் தெரிவித்தன. எனினும், 15,000 பேர் கிழக்கு அலெப்போவிலிருந்து வெளியேறுவர் என எதிர்பார்ப்பதாக, சுயாதீன ஊடகங்கள் தெரிவித்தன.

கிழக்கு அலெப்போவிலிருந்து வெளியேறப் போகிறார்களா அல்லது அங்கேயே தங்கப் போகிறார்களா என்ற தெரிவு, பொதுமக்களுக்கே வழங்கப்பட்டதாக, பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்தது. ஆனால், 50,000 பேர் இருப்பதாகச் சொல்லப்படும் கிழக்கு அலெப்போவிலிருந்து 15,000 பேர் வெளியேற எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், மிகுதி 35,000 பேரும், அங்கேயே தங்க விரும்பியுள்ளனரா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.

முன்னதாக, மருத்துவ வாகனப் பேரணி மீது, அரசாங்கத்துக்கு ஆதரவான படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஒருவர் கொல்லப்பட்ட நிலையிலும், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .