2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரு அணிகள் இணைப்பு: பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு

Editorial   / 2017 ஜூன் 12 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு அணிகள் இணைப்புப் பேச்சுவார்த்தைக்காக உருவாக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ​அறிவித்துள்ளார்.  

அணிகள் இணைப்புத் தேவையில்லை என்று மக்கள் விரும்புவதாகவும் எனவே, பேச்சுவார்த்தைக் குழு இன்றோடு கலைக்கப்படுகின்றது என்று, நேற்று (11) மாலை தெரிவித்துள்ளார்.  

“இந்த இணைப்பை, தமிழ்நாட்டிலுள்ள மக்கள் விரும்பவில்லை. மக்களுடைய ஆதரவு எமக்கு உண்டு என்பதால், தனியாக நின்று வெல்வதையே, அவர்கள் விரும்புகின்றனர். எனவேதான், இந்தப் பேச்சுவார்த்தைக் குழுவை நான் கலைக்கின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.  

அ.தி.மு.கவின் இரு அணிகள், தனித்தனியே செயற்பட்டு வந்த நிலையில், டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, 30 சட்டசபை உறுப்பினர்கள் சென்றதன் பின்னர், கட்சி, மூன்று பிரிவுகளாக மாறியது. இதனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
ஓ. பன்னீர்செல்வத்தின் தரப்பினருடன் இணைவது குறித்து, அழுத்தம் கொடுத்து வந்தார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர்
ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

எனினும், இவருடைய அறிவிப்பு விடுக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, இரு அணிகளும், வெகு விரைவில் இணைக்கப்படும் என்று, மக்களவையின் பிரதி சபாநாயகர் எம். தம்பிதுரை தெரிவித்துள்ளார். மேலும், இரு அணிகள் இணைப்பிலும் ஆர்வமாக உள்ளதாகவும், ஓ.பிஎஸ் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

அறிவிப்பின் போது, அ.தி.மு.க, தற்போது ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கட்சி மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும், ஓ.பிஎஸ் கூறியிருந்தார்.  

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து, சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.  

'பேச்சுவார்த்தை என்ற பேரில் நாடகம் அரங்கேற்றுகின்றனர்'

“பேச்சுவார்த்தை என்ற பேரில், அ.தி.மு.க சசிகலா அணியினர் நாடகமாடுகின்றனர்” என்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று (12) தெரிவித்துள்ளார்.  

“அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்த குழுக்கள் கலைக்கப்பட்ட பின்னர் பேச்சுவார்த்தை எப்படி நடைபெறும்? பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்பட்ட பின்னர், தொடர்ந்து நாடகம் ஆடுகின்ற சூழலை, தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கின்றனர். நாங்களும் நாடகம் ஆடத் தயார் இல்லை. ஆக்கபூர்வமான எந்தவொரு யோசனையும், கருத்துப் பரிமாற்றம் செய்யவில்லை. இதனைக் கவனித்துத் தான், பேச்சுக்கென அமைக்கப்பட்ட குழுவைக் கலைத்தோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.  

மேலும், “அ.தி.மு.கவில் உள்ள தொண்டர்கள், எங்கள் பக்கம் உள்ளனர் என்பதை, கூடிய விரைவில் நிரூபிப்போம். கட்சி சட்ட விதிப்படி, பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. பொருளாளரும் அவைத்தலைவரும் தான், கட்சியை நடத்த வேண்டும் என்ற நிலையில், தேர்தல் ஆணையகம் நல்ல முடிவைத் தரும்.  

“போயஸ் கார்டன், எங்களின் கோயில். அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும். ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், அவருடைய சொத்துகள் யாருக்குச் செல்ல வேண்டும் என்பது, சட்ட முடிவின்படி நடவடிக்கை எடுப்போம். 14ஆம் திகதி காலை, சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைப்போம்” என்றும் அவர் கூறியுள்ளார்.  

‘சகோதரர்கள் இணைய வேண்டும்’

“பிரிந்து சென்ற சகோதரர்கள், மீண்டும் வரவேண்டும்.
அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து இரு அணிகளும் பேசி வருகின்றோம்” என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

“அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்பதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அந்த முடிவில் மாற்றம் எதுவும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.  

அ.தி.மு.க. அணிகள் இணைவதற்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பிஎஸ் கூறியிருந்தமை குறித்து, ​அவர் இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியதாவது,  

“அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்று, பொதுமக்களும், கட்சியினரும் விரும்புகிறனர். எனவே, இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த முடிவில் மாற்றம் எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.  

​மேலும், இந்த இணைப்பு முயற்சியில் நிபந்தனை எதுவும் விதிக்கப்பட்டதா என்று வினவி​யபோது, “இதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

இதேவேளை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தால் எடுக்கப்பட்ட இந்த முடிவை, மறு பரிசீலனை செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .