2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘இராணுவத்தின் வெற்றி போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பெரும்படி’

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவிலுள்ள பகுதிகளை எதிரணி தொடர்ந்து இழந்து வருகையில், அலெப்போவில் தனது இராணுவத்தின் வெற்றியானது, சிரியாவில் இடம்பெற்றுவரும் ஐந்து வருட சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பெரும்படி என சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் தினப்பத்திரிகையான அல்-வாட்டானில் இன்று பிரசுரமாகிய நேர்காணலொன்றிலேயே, மேற்படி கருத்துகளை ஜனாதிபதி அசாட் வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, அலெப்போவில் எதிரணியினரை வெற்றி கொள்வதால், சிரியாவின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வராது எனவும் ஜனாதிபதி அசாட் கூறியுள்ளார். “அலெப்போ எங்களுக்கு வெற்றி என்பது உண்மைதான், ஆனால், யதார்த்தபூர்வமாகப் பார்ப்போமானால்; இதன் மூலம் சிரியாவில் போர் முடிவடையாது” என ஜனாதிபதி அசாட் தெரிவித்துள்ளார்.

“எனினும், இது முடிவை நோக்கிய பெரும்படி” என மேலும் அசாட் கூறியுள்ளார். மூன்று வாரங்களாகத் தொடரும் வலிந்த தாக்குதல்களினால், 2012ஆம் ஆண்டு முதல் எதிரணியின் பலம்வாய்ந்த இடங்களிலொன்றாக இருந்த கிழக்கு அலெப்போவின் 80 சதவீதமானளவு பகுதிகளை சிரிய அரசாங்கப் படைகள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில், குறுகி வரும் அலெப்போவின் தென்கிழக்கு முனையில் சூழப்பட்டுள்ள எதிரணிப் பிரிவுகள், உடனடியான ஐந்துநாள் மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை நேற்று (07) அறிவித்திருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில், அலெப்போவில் யுத்தநிறுத்தம் ஒன்று தொடர்பான பொருத்தப்பாடு குறித்து அசாட்டிடம் வினவப்பட்டபோது, “உண்மையாக, நடைமுறையில் அப்பிடி ஒன்று இல்லை” என்று அசாட் கூறியுள்ளார். அமெரிக்காவினுடைய பயங்கரவாத முகவர்கள், தற்போது சிக்கலான நிலையில் தற்போது இருப்பதாலேயே, குறிப்பாக அமெரிக்கர்கள் யுத்தநிறுத்தத்தை வேண்டுகின்றனர் என அசாட் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .