2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘எடப்பாடி பழனிசாமி ஆட்சி சுற்றுலா அமைச்சரவையாக மாறி விட்டது’

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி சுற்றுலா அமைச்சரவையாக மாறி விட்டது என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த திருமண விழாவொன்றிலேயே மேற்படி கருத்தை மு.க. ஸ்டாலின் வெளிப்படுத்தியிருந்த நிலையில், அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இன்றைக்கு நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை எல்லோரும் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறோம். பத்திரிகைகளில் தொடர்ந்து 10 நாட்களாக வந்து கொண்டிருக்கும் செய்தி என்னவென்றால், இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஐந்து சதவீதத்துக்கு கீழே சென்றுள்ளது என்பதுதான். இது 27 ஆண்டு காலமாக இல்லாத கொடுமை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த செய்திகளை கூட ஊடகங்களில் பெரிதாக பார்க்க முடியவில்லை. இதை மூடி மறைக்கும் செயல்கள்தான் நடக்கிறது. சமூக வலைத்தளங்களில்தான் அதிகம் இது போன்ற தகவல்கள் வெளியாகிறது. இப்படிப்பட்ட நிலையில் நாடு சிக்கித்தவித்து கொண்டிருகிறது. இதையெல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் கைது நடந்துள்ளது. அதுமட்டுமல்ல காஷ்மிர் பிரச்சினையையும் முன்னிறுத்தி காட்டுகிறார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்குச் சென்று தொழில் முதலீடுகளை கொண்டு வரப் போய் உள்ளார் என்கிறார்கள். முதலமைச்சர் மட்டும் போய் இருந்தால் மக்கள் ரசிப்பார்கள். வாழ்த்துவார்கள். ஆனால் ஒரு அமைச்சரவையே போய் உள்ளது. இன்னும் எட்டு அமைச்சர்கள் வெளிநாடு போக இருக்கிறார்களாம். எனவே சுற்றுலா அமைச்சரவையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழ ஆட்சி மாறி இருக்கிறது.

வெளிநாடு செல்லட்டும் வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஆனால் இதே தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் 2.42 இலட்சம் கோடி இந்திய ரூபாய் அளவுக்கு முதலீட்டை பெற்றோம் என்று புள்ளி விவரத்தை தெரிவித்து, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டதாக கூறினார்கள்.

ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதும் இரண்டாது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். இதில் சுமார் மூன்று இலட்சம் கோடி இந்திய ரூபாய் அளவுக்கு முதலீடு வந்ததாகத் தெரிவித்தனர். இரண்டையும் கூட்டிப் பார்த்தால் ஐந்து இலட்சம் கோடி இந்திய ரூபாய் அளவு முதலீடு வந்தாக பார்க்கிறோம்.

ஆகவே எவ்வளவு முதலீட்டை தமிழகம் பெற்றுள்ளது. அதில் எவ்வளவு பேர் தொழில் தொடங்க முன் வந்துள்ளனர்? அதன் மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள் என்று சட்டசபையில் பேசினேன். ஆனால் இதுவரை அதை வெளியிடவில்லை.

நாங்கள் கேட்பது, ஏற்கனவே இருந்த நிலை என்ன என்பதுதான். இப்போது 16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டதாக செய்தி வருகிறது. இவை அனைத்தும் அறிவிப்புகளாக இருக்கிறதே தவிர உண்மையிலேயே செயல்படுத்தும் நிலையில் இருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .