2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.அமெரிக்காவை விமர்சிக்கிறது ஈரான்

Editorial   / 2017 ஜூலை 18 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து முரண்பாடான சமிக்ஞைகளையே தாம் பெற்றுவருவதாக, ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக, ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் றெக்ஸ் டிலெர்ஸனுடன் இதுவரை கலந்துரையாடவில்லை என, ஈரான் வெளிநாட்டமைச்சர் ஜாவட் ஸரீப் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை, மோசமான ஒப்பந்தம் என வர்ணித்த தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் ஜனாதிபதியாகத் தெரிவானால், இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தற்போது 2 தடவைகள், இந்த ஒப்பந்தம் தொடர்பான மீளாய்வை, காங்கிரஸுக்குச் சமர்ப்பிக்க வேண்டியிருந்த போது, ஒப்பந்தத்தை ஏற்று, ஈரான் நடக்கிறது என, வெள்ளை மாளிகையால் அறிக்கை அளிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, முரண்பாடான சமிக்ஞைகளே தமக்குக் கிடைப்பதாகத் தெரிவித்த அமைச்சர் ஜாவட், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, உண்மையுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
அணுவாயுதங்களை உருவாக்குவதற்கு, ஈரான் எப்போதும் முயலாது என்று தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு, இந்த ஒப்பந்தத்துக்கு ஏற்ப ஈரான் நடக்கிறது என உறுதிப்படுத்தியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆராய்வதற்காக, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளோடு, ஜேர்மனும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளன. இதன்போது, இந்த ஒப்பந்தத்தை ஏற்று நடப்பதற்கு ஐ.அமெரிக்கா மறுக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கவுள்ளதாக, அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் மீதான தடைகளை, ஐ.அமெரிக்கா இன்னும் நீக்கவில்லை என்பதே, ஈரானின் குற்றச்சாட்டாக உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .