2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'ஐ.நா நிவாரணத் தொடரணி மீது நடத்தப்பட்டது வான் தாக்குதலே '

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் அலெப்போ பகுதிக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் சென்ற ஐக்கிய நாடுகளின் தொடரணி மீது, வான் தாக்குதலே மேற்கொள்ளப்பட்டது என, ஐ.நா விசாரணையொன்று உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், தாக்குதலை யார் மேற்கொண்டனர் என்பதை, அவ்விசாரணை, நேரடியாகக் குறிப்பிடவில்லை.

இவ்வாண்டு செப்டெம்பர் 19ஆம் திகதியன்று, அலெப்போவுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் சென்ற குறித்த தொடரணி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதோடு, 22 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையிலேயே, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் "குறித்த சம்பவம், வான் தாக்குதலின் காரணமாகவே மேற்கொள்ளப்பட்ட அதேநேரத்தில், அதை மேற்கொண்டவரை அல்லது மேற்கொண்டவர்களை, அடையாளங் காண முடிந்திருக்கவில்லை. அந்தத் தொடரணி மீது, ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி, வெவ்வேறான ஆயுதங்களால், வானிலிருந்து தாக்கப்பட்டுள்ளது" என முடிவு செய்யப்பட்டுள்ளது என, விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது. 30 நிமிடங்கள் நீடித்த அந்தத் தாக்குதலில் ஏவுகணைகள், றொக்கெட்டுகள், சிறிய குண்டுகள் ஆகியன பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும், அவ்விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பதை அக்குழு வெளிப்படையாகத் தெரிவிக்காத போதிலும், சிரியா மீதும் ரஷ்யா மீதும், அது விரலை நீட்டியுள்ளது. சிரியா, ரஷ்யா, மற்றும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி ஆகியன, இந்தத் தாக்குதலை மேற்கொள்வதற்கான திறனைக் கொண்டவை எனக் குறிப்பிட்ட அக்குழு, எனினும், இந்தத் தாக்குதலை, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நடத்தியிருக்கலாம் என்பதற்கு, சாத்தியக்கூறுகள் அரிதாகவே இருக்கின்றன எனக் குறிப்பிட்டது.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தருணத்தில், சிரியாவின் 3 ஹெலிகொப்டர்களும் 3 விமானங்களும் அப்பகுதியில் பறந்து திரிந்தன என்ற அறிக்கைகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அக்குழு, ரஷ்ய விமானமொன்றின் மீதும் சந்தேகம் காணப்படுவதாகவும் தெரிவித்தது.

அப்போது போராளிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு, சிரியா மீதும் ரஷ்யா மீதுமே, ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும், அந்தத் தாக்குதல், தரையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டதாக அவ்விரு நாடுகளும் தெரிவித்திருந்தன. எனவே, தற்போது வெளியாகியுள்ள விசாரணை முடிவு, அந்நாடுகளின் அந்தக் கருத்தை, நிராகரிப்பதாக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .