2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ஐ.நாவுடனான உறவுகளை இஸ்ரேல் மீளமதிப்பிடவுள்ளது’

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 25 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்குகான நிதியளிப்பு, இஸ்ரேலில் ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளின் பிரசன்னம் உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகளுடனான தனது உறவுகளை, இஸ்ரேல் மீளமதிப்பிடவுள்ளதாக, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நேற்று (24) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய குடியிருப்புகள் அமைப்பதை நிறுத்தக் கோரும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானத்தைத் தொடர்ந்தே, ஐக்கிய நாடுகளினுடனான உறவுகளை இஸ்ரேல் மீள மதிப்பிடவுள்ளதாக, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது தவிர, குறிப்பாக இஸ்ரேலுக்கெதிரான ஐந்து ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள், ஐந்து அமைப்புகளுக்கான, ஏறத்தாழ 7.8 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை நிறுத்துமாறு தான் அறிவுத்தியதாகத் தெரிவித்த நெதன்யாகு, இன்னும் உண்டு எனக் கூறியுள்ளார். எவ்வாறெனினும், நிறுவனங்களின் பெயரைப் பெயரிட்டிருக்காத நெதன்யாகு, மேலதிக தகவல்கள் எதனையும் தெரிவித்திருக்கவில்லை.

ஐக்கிய நாடுகளுடனான தமது அனைத்துத் தொடர்புகளையும் ஒரு மாதத்துக்குள் மீள் பரிசீலனை செய்து முடிக்குமாறு வெளிநாட்டு அமைச்சுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேலை இராஜதந்திர ரீதியாக பாதுகாக்கும் தனது நீண்டகால அணுகுமுறையை முறித்து, தான் முன்பு பல தடவைகள் பாவித்தது போன்று தனது வீட்டோ அதிகாரத்தை பாவிக்காத நிலையில், 1979ஆம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக இஸ்ரேலின் குடியேற்றக் கொள்கையை கண்டிக்கும் ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை, கடந்த வெள்ளிக்கிழமை, 15 அங்கத்தவர்கள் கொண்ட பாதுகாப்புச் சபை எடுத்திருந்தது.

தனது வீட்டோ அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா பயன்படுத்தாமல் விட்டதன்  மூலம் இஸ்ரேலினை ஐக்கிய அமெரிக்கா கோபப்படுத்தியிருந்தது. இது தவிர, மத்திய கிழக்கில் தனது நெருங்கிய நாடான இஸ்ரேலை, தனது பதவிக்காலத்தின் இறுதி நாட்களில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைவிடுவதாகவும் இஸ்ரேல் சாடியிருந்தது.

மேற்படித் தீர்மானத்தை கொண்டு வருவதைத் தடுப்பதற்கு பலத்த பிரயத்தனங்களை இஸ்ரேல் மேற்கொண்டு வந்ததுடன், ஐக்கிய அமெரிக்கா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தீர்மானத்தை தடுக்குமாறும் கோரியிருந்த நிலையிலேயே, சரித்திரபூர்வமான மேற்படி வாக்கெடுப்பு நிறைவேறியிருந்தது.

எகிப்து, கடந்த வியாழக்கிழமை கொண்டு வந்த தீர்மானமானது மீளப்பெறப்பட்டபோதும், நியூசிலாந்து, மலேஷியா, செனகல், வெனிசுவேலா ஆகிய நாடுகளின் விண்ணப்பத்திலேயே கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், நியூசிலாந்து, செனகலுக்கான தனது உயர்ஸ்தானிகர்களை இஸ்ரேல் மீள அழைத்திருந்தது. வெனிசுவேலா, மலேஷியாவுடன் இஸ்ரேலுக்கு இராஜதந்திர உறவுகள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்மானத்தில், எதுவித பொருளாதாரத் தடைகள் இல்லையென்றபோதும், இந்தத் தீர்மானத்தையடுத்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுவதற்குரிய பொருத்தப்பாடு தோன்றும் என இஸ்ரேலிய அதிகாரிகள் அஞ்சுகின்றனர். தவிர, இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீதும், குடியிருப்புகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் மீது சில நாடுகள் தடையை விதிக்க இந்தத் தீர்மானம் வழிவகுக்கும் எனவும் இஸ்ரேலிய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .