2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கட்டாருடன் ஆறு நாடுகள் பிரிவு

Editorial   / 2017 ஜூன் 05 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், யேமன், மாலைதீவுகள் ஆகிய ஆறு நாடுகள், கட்டாருடனான தமது தொடர்பைத் துண்டிப்பதாக, இன்று அறிவித்தன. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் இக்குற்றச்சாட்டிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  

பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள அரேபிய நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள எண்ணெய் வளமிக்க இந்த நாடுகளுக்கிடையில், அண்மைக்காலமாகவே தொடர்ந்து வந்த முரண்பாடுகளின் உச்சமாக, இது இடம்பெற்றுள்ளது.  

இதில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகியன வளைகுடா நாடுகள் என்பதோடு, எகிப்து, யேமன் ஆகியன, இந்நாடுகளுக்கு மிக அண்மையாகக் காணப்படும் நாடுகளாகும்.

உலகிலுள்ள மிகவும் பழைமையான முஸ்லிம் இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்துடன் தொடர்புகளைப் பேணுதல், வளைகுடா நாடுகளின் பரம வைரியான ஈரானுடன் தொடர்புகளைப் பேணுதல் ஆகியன, கட்டார் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாகும்.  

தங்களுடைய தொடர்பைத் துண்டிக்கும் அறிவிப்பை வெளியிட்ட இந்நாடுகள், தங்களுடைய நாட்டில் காணப்படும் கட்டாரைச் சேர்ந்த விருந்தினர்கள், வசிப்பவர்கள் ஆகியோர்,
 2 வாரங்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டன. அத்தோடு, யேமனில் போரிட்டுவரும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியிலிருந்தும், யேமன் வெளியேற்றப்பட்டுள்ளது.  

இந்த முடிவு தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட சவூதி அரேபியாவின் அரச ஊடகம், “முஸ்லிம் சகோதரத்துவச் சமூகம், ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத, பிரிவினைவாதக் குழுக்களை, [கட்டார்] அரவணைக்கிறது. அத்தோடு, இந்தக் குழுக்களின் செய்திகளையும் திட்டங்களையும், தங்களுடைய ஊடகங்கள் மூலமாக, தொடர்ச்சியாக ஊக்குவிக்கிறது” எனத் தெரிவித்தது.  

இதில், பிரிவினைவாத அமைப்புகளுக்கான ஆதரவு என்ற குற்றச்சாட்டு என்பது ஒருபக்கமிருக்க, கட்டாரின் அரச ஆதரவுடன் இயங்கும் அல் ஜஸீரா ஊடகம் மீதான கோபத்தையும், இந்த நாடுகள் வெளிப்படுத்தியுள்ளன.  

குறிப்பாக, ஐக்கிய அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர், இஸ்‌ரேலிய அமைப்புகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என, அவரது மின்னஞ்சல்கள் ஹக் செய்யப்பட்டு வெளிக்கொணர்ந்திருந்த நிலையில், அதற்கு 2 நாட்களில், இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த செய்தியை, அல் ஜஸீரா ஊடகம், முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டிருந்தது.  

தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச விமான சேவையான எதிஹாட் எயார்வேய்ஸ், கட்டாருக்கான தங்களது சேவையை, இன்று காலை முதல், காலவரையறையற்று நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால், தனிமைப்படுத்தப்படும் ஆபத்தை, கட்டார் எதிர்கொண்டுள்ளது.  

குறிப்பாக, பிராந்தியத்தின் மிகப்பெரிய ஐக்கிய அமெரிக்க இராணுவத் தளத்தைக் கொண்டுள்ள கட்டார், 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தையும் நடத்தவுள்ளது. எனவே, இவ்வாறு தனிமைப்படுத்தப்படுமாயின், கடுமையான பிரச்சினைகளை, கட்டார் எதிர்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X