2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

டலஸ் தாக்குதல்: பாரிய தாக்குதலைத் திட்டமிட்டார் தாக்குதலாளி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் டலஸ் பகுதியில் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதலாளி, பாரிய தாக்குதலொன்றைத் திட்டமிட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, நெருக்கடியான இந்நிலையில், அமைதியைப் பேணுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.

கறுப்பினர இளைஞர்கள் இருவர், வெவ்வேறான இரண்டு பொலிஸ் தாக்குதல்களில் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, "கறுப்பின உயிர்கள் பெறுமதியானவை" என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், ஸ்னைப்பர் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டதில், ஐந்து பொலிஸார் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் இராணுவ வீரரான மிக்கா ஜோன்சன், றோபோ ஒன்றினால் குண்டுவைத்துக் கொல்லப்பட்ட நிலையில், தடைசெய்யப்பட்ட கறுப்பின ஆயுதக் குழுக்களுக்கு அவர் ஆதரவை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், குண்டு தயாரிக்கும் பொருட்களும் அதன் செய்முறையும் கைப்பற்றப்பட்டதாகவும், அந்தச் செய்முறையில் இராணுவ யுத்திகள் தொடர்பாக அவர் எழுதியிருந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது.

தற்போது பொலிஸாரில் தகவலின்படி, பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. "பாரிய வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக, சந்தேகநபர் பயின்று வந்ததாக, விசாரணையாளர்கள் நம்புகின்றனர். கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், எங்களது நகரத்திலும் வடக்கு டெக்ஸாஸ் பகுதியில் பாரிய வெடிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவாக இருந்தன" என, டலஸ் நகரத்தின் பிரதம பொலிஸ் அதிகாரி டேவிட் பிரௌண் தெரிவித்தார்.

அத்தோடு, சந்தேகநபர் தாக்குதலை மேற்கொள்ளும் போது, அவருடன் பேரம்பேசல்கள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். "சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு அவருடன் பேரம் பேசினோம். அவர் எங்களிடம் பொய் சொன்னார், விளையாடினார், எங்களைப் பார்த்துச் சிரித்தார், பாடினார், எவ்வளவு பேரைக் கொன்றுள்ளதாகக் கேட்டார், இன்னும் அதிகமாகக் கொல்ல வேண்டுமெனத் தெரிவித்தார்" என, அந்தத் தருணங்களை பிரௌண் விவரித்தார்.

துப்பாக்கிச் சண்டையில் ஒரு கணத்தில் ஜோன்சன் காயமடைய, தன்னுடைய இரத்தத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்த சுவரில் "RB" என எழுதியுள்ளார். எனினும், அதன் அர்த்தம் என்னவென, இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சந்தேகநபர், சுவரொன்றுக்குப் பின்னால் மறைந்து கொண்டே தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், அவரை அடைவது கடினமாகக் காணப்பட்டதால், றோபோ ஒன்றைப் பயன்படுத்தி, குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டே அவர் கொல்லப்பட்ட நிலையில், அதே மாதிரியான சூழலில், மீண்டும் அதே நடவடிக்கையை மேற்கொள்ளத் தயங்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .