2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டிலெர்ஸனை நியாயப்படுத்துகிறார் ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 14 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த இராஜாங்கச் செயலாளராக றெக்ஸ் டிலெர்ஸனை தெரிவு செய்தமையை, ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், நேற்று (13) நியாயப்படுத்தியுள்ளார்.

ரஷ்யாவுடன் டிலெர்ஸனுக்கு காணப்படும் கரிசனைகளை நிராகரித்த ட்ரம்ப், ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு புதிய பாதையொன்று தேவைப்படுவதாக கூறியிருந்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ள குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையை எவ்வாறு மாற்றுவார் என உலகம் எதிர்பார்க்கையில், ட்ரம்ப்பின் அமைச்சரவையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டிருந்த பதவியாக இராஜாங்கச் செயலாளர் பதவியாக காணப்பட்டிருந்தது.

இந்நிலையில், இராஜாங்கச் செயலாளராக றெக்ஸ் டிலெர்ஸனை நேற்றுக் காலையில் அறிவித்த ட்ரம்ப், "சிறந்த இராஜதந்திரி", "அதிசிறந்தவர்களில் ஒருவர் மற்றும் எமது காலத்தில் அதிக திறன்வாய்ந்த பூகோள வியாபாரத் தலைவர்" எனப் புகழ்ந்திருந்தார்.

இதேவேளை, டெக்ஸாஸின் முன்னாள் ஆளுநரான றிக் பெரியை, ஐக்கிய அமெரிக்க சக்தித் திணைக்களத்துக்கு தலைமை தாங்குவதற்காக, ட்ரம்ப் தெரிவு செய்துள்ளதாக, ட்ரம்ப்புக்கு நெருக்கமான தகவல் மூலமொன்று தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளரைத் தெரிவு செய்யும் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் சக்தித் திணைக்களத்தை அகற்றப் போவதாக றிக் பெரி முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது உள்ளகச் செயலாளராக, முன்னாள் கடற்படை ஈருடக தளபதியும் குடியரசுக் கட்சியால் முதற்தடவையாக பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவருமான றயான் ஸிங்கேயை ட்ரம்ப் தெரிவு செய்துள்ளதாக, அவரின் பதவி மாற்றக் குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்று  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது ஜனாதிபதி பதவிக்காலத்தின்போது, தனது வியாபாரங்களை, தனது சிரேஷ்ட புதல்வர்கள் இருவரும், தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்றதிகாரிகளும் பார்த்துக் கொள்வார்கள் என ட்ரம்ப், கடந்த திங்கட்கிழமை (12) கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .