2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை ஆறாக உயர்வு

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியப் பிரதேசத்தில், விவசாயிகளால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, இன்றோடு (07), ஆறாக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

வங்கிக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்குச் சிறந்த கொள்முதல் விலை அளிக்கப்படல் வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில், விவசாயிகள், கடந்த 1ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு போராட்டம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.  

போராட்டத்தைக் கலைப்பதற்கு, பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, அறுவர் இறந்ததையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த 100க்கும் அதிகமான போராட்டக்காரர்கள், இரண்டு பொலிஸ் நிலையங்கள், 8 ட்ரக்கள், அம்பியூலன்ஸ் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் போன்றவற்றுக்குத் தீ வைத்தனர். இதையடுத்து, தலைநகரம் போபாலிருந்து 350 கிலோமீற்றர் ​வரையான பகுதிக்குள், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  

மேலும், சமூக வலைத்தளங்களில், போராட்டம் குறித்தான கருத்துகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டமையால், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, மாநிலத்துக்குட்பட்ட பல பகுதிகளில், இணையத்தளங்கள் மற்றும் அலைபேசிக்கான வலையமைப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.  

பொலிஸாரை நோக்கிக் கற்களை வீசிய கும்பலைக் கலைப்பதற்காகவே, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதன்போது சம்பவ இடத்திலேயே இருவர் பலியானதாகவும் மேலும் நால்வர் படுகாயமடைந்ததாகவும், நேற்று (06) தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 6 ஆக நேற்று அதிகரித்தது.  

எனினும், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டமை தொடர்பாக மறுப்புத் தெரிவித்துள்ள மாநில உள்துறை அமைச்சர் பூபேந்திரா சிங்க, சில சமூக விரோதிகளே, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்தப் போராட்டத்தின் போது, பொலிஸ் கண்காணிப்பாளர் ஒருவர், கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி, ஒரு ​கண்ணை இழந்துள்ளதாக, பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான அவசர விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணித்துள்ள மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், உயிரிழந்தவர்களது குடும்பத்துக்கு தலா 10 இலட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களது குடும்பத்துக்கு தலா 1 இலட்சம் ரூபாயும் இழப்பீடு வழக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X