2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’துரோகிகளின் தலைகளைக் கொய்வோம்’

Editorial   / 2017 ஜூலை 16 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கிய ஜனாதிபதி றிசெப் தய்யீர் ஏர்டோவானைப் பதவியிலிருந்து விலக்குவதற்கான இராணுவப் புரட்சி இடம்பெற்று, நேற்றுடன் (15) ஓராண்டு பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து, நாடாளாவிய ரீதியில் பேரணிகள் பல நடத்தப்பட்டன. அதன்போது, துரோகிகளின் தலைகள் வெட்டி வீழ்த்தப்படுமென, ஜனாதிபதி ஏர்டோவான் எச்சரித்தார்.

ஜூலை 15ஆம் திகதியை, "ஜனநாயகத்துக்கும் ஒற்றுமைக்குமான" வருடாந்த விடுமுறை நாளாக, அதிகாரிகள் பிரகடனப்படுத்தியிருந்தனர். நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகள், பல்வேறு இடங்களில் இடம்பெற்றன.

ஜனாதிபதி ஏர்டோவான், தலைநகர் அங்காராவிலுள்ள நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட அமர்வில் கலந்துகொண்டார், பின்னர் இஸ்தான்புல்லில் இடம்பெற்ற பேரணியொன்றில் உரையாற்றினார், அதைத் தொடர்ந்து, தலைநகருக்கு மீண்டும் சென்று, நாடாளுமன்றத்துக்கு வெளியே இடம்பெற்ற பேரணியும் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ஏர்டோவான், "முதலில், அந்தத் துரோகிகளின் தலைகளை நாங்கள் வெட்டிச் சாய்ப்போம்" என்று தெரிவித்து, நாட்டில் மரண தண்டனையை மீண்டும் கொண்டுவருவதற்காக, நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமூலத்திலும் கைச்சாத்திடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மரண தண்டனை, 2014ஆம் ஆண்டில் துருக்கியில் இல்லாது செய்யப்பட்டது. அது மீண்டும் கொண்டுவரப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் துருக்கியின் முயற்சிகளுக்கான இறுதி அடியாக அது அமையும்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, இந்த இராணுவப் புரட்சி தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொள்பவர்கள், ஐக்கிய அமெரிக்காவின் குவான்டனாமோ தடுப்பு முகாமின் கைதிகள் போன்று, செம்மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

அங்கு கூடியிருந்த மக்கள், பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியதோடு, "தய்யீப்பின் படைவீரர்கள் நாங்கள்" என்று உரத்துச் சத்தமிட்டனர்.

அந்தச் சத்தங்களுக்கு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, "எனது பிரஜைகளிடத்தில் ஆயுதங்கள் இருந்தனவா? இன்று வைத்திருப்பதைப் போன்று, அவர்களின் கைகளில் கொடிகள் இருந்தன. ஆனால், பயன்தரக்கூடிய இன்னோர் ஆயுததத்தை அவர்கள் வைத்திருந்தனர்: அவர்களது நம்பிக்கை" என்று குறிப்பிட்டார்.

கடந்தாண்டு ஜூலை 15ஆம் திகதி, இராணுவத்தினரில் ஒரு பகுதியினர், புரட்சி மேற்கொண்டனர். எனினும், அந்தப் புரட்சி, பொதுமக்களின் ஆதரவுடன் சில மணிநேரங்களிலேயே தோற்கடிக்கப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் தவிர, 149 பேர் இதில் கொல்லப்பட்டனர். இதுவரை, சுமார் 50,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார், இராணுவத்தினர், அரச அதிகாரிகள் என சுமார் 150,000 பேர், அவர்களது பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X