2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தற்கொலை செய்தாரா MH370 விமானி?

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 25 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனதாக மலேஷியன் எயார்லைன்ஸ் விமானமான MH370இன் விமானி, அந்த விமானத்தை வேண்டுமென்றே வீழ்த்தினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்த, அமெரிக்காவின் புலனாய்வுத் துறையின் (எப்.பி.ஐ) இரகசிய அறிக்கையொன்று வெளியாகியுள்ள நிலையில், அது குறித்த முக்கியத்துவத்தை வழங்குவதற்கு, அவுஸ்திரேலியா மறுத்துள்ளது.

எப்.பி.ஐ வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த விமானத்தின் விமானியான ஸகாரி அஹ்மட் ஷா என்பவர், தனது வீட்டில் தயாரித்த விமான மாதிரியொன்றை வைத்து, MH370 விமானம் சென்றதாக எண்ணப்படும் பாதையில், பாதையொன்றை வடிவமைத்துள்ளார். MH370 விமானம் காணாமல் போவதற்குச் சில வாரங்கள் முன்னதாக, இவ்வாறு அவர் செயற்பட்டுள்ளார்.

அதுகுறித்த தகவல்கள், அவரது கணினியின் வன்தட்டில் காணப்பட்ட நிலையில், அவை மீட்கப்பட்டு, மலேஷியப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதோடு, இதுவரை அது இரகசியமாகப் பேணப்பட்டது. எனினும், அமெரிக்காவின் நியூ யோர்க் சஞ்சிகை, அவ்விவரங்களை வெளியிட்டுள்ளது. எனவே, விமானி தொடர்பான கவனம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலியப் பிரதமர் மல்கொம் டேர்ண்புல், இந்த விடயம் தொடர்பாக தானும் தனது அரசாங்கமும் அறிந்திருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "இந்தக் கோரத்தின் இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்பாக, மலேஷிய அதிகாரிகளுக்குரிய விடயமே இது என்பதைத் தவிர, அது தொடர்பாக என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது" என்றார்.

அத்தோடு, இந்தத் தரவுகளின்படி, விமானத்தை வேண்டுமென்றே விமானி, மோதியிருக்கலாம் என்பதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாக உள்ள போதிலும், அந்த விமானம் எங்கே உள்ளது என்பதற்கான எந்தவிதத் தரவுகளையும் அது தரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் காணாமல் போனமையைத் தொடர்ந்து, அதைத் தேடும் பணிகளில் முக்கிய நாடாக, அவுஸ்திரேலியா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .